பாமக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனும் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம், பாமக தலைவர் அன்புமணி என்று குறிப்பிட்டு அவரது அலுவலக முகவரிக்கு கடிதம் அனுப்பியது.
இதை எதிர்த்து ராமதாஸ் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீராய்வு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி மினி புஷ்கர்னா விசாரித்தார்.
இன்று (பிப்ரவரி 9) மீண்டும், வழக்கு விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் ஏற்கனவே பாமக கொடுத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை, தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் முடிவெடுப்பதற்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் தான் பாமக விவகாரத்தில் அன்புமணி தரப்பு கொடுத்த ஆவணத்தின் அடிப்படையில் கடிதமும் அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாமகவின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க எந்த தடையும் இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் வாதம் பதிவு செய்யப்படுகிறது என்று தெரிவித்த நீதிபதி, தற்போதைய சூழலில் இந்த நீதிமன்றம் பாமக கட்சி வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி மறு ஆய்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ரிட் மனுவில் அவர்கள் தாங்கள்தான் தலைவர் என்பதை முறையீடு செய்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாரா 18-ல் தேர்தல் ஆணையத்தினுடைய வாதம் பதிவு செய்யப்பட்டது. அதில் ராமதஸையோ, அன்புமணியையோ அங்கீகரிக்கவில்லை என்பதைப் போன்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதைத்தான் தங்களுக்கு சாதகமானதாக அவர்கள் பேசி வந்தார்கள்.
இதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமானது என தெரிவித்தார்கள். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு நோட்டீஸ் வழங்கி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தச் சூழலில்தான் இந்த மறுஆய்வு மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தங்களிடம் இருக்கக்கூடிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளின் அடிப்படையில் அன்புமணி தான் தலைவராக இருக்கிறார் என்பதை இந்த நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.
நாங்கள் யாரையும் நிராகரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. ஆனால் அதேவேளையில் ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தலைவராக தொடர்கிறார் என்று கூறப்பட்டது. அன்புமணியின் தலைவர் பதவியை ஏற்க மறுப்பவர்கள், முறையான சிவில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக வந்தால் மட்டும்தான் ஆவணத்தை மாற்ற முடியும், அதுவரையில் தங்கள் ஆவணத்தின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் செயல்பட முடியும் என்பதை இன்று பதிவு செய்தார்கள்.
எனவே, தேர்தல் ஆணையத்தில் தற்போது இருக்கக்கூடிய ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தலைவராக இருக்கிறார்; அவருடைய பதவிக்காலம் 2026 ஆகஸ்ட் மாதம் வரை தொடர்கிறது என்பது இன்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ராமதாஸ் தரப்பு, ‘இதை ஏற்க முடியாது, இதற்கு நாங்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று முறையிட்டது. நீதிமன்றம் அவர்கள் சொன்னதையும் பதிவு செய்துகொண்டது. ஆனால் நீதிமன்றம் இன்று தெளிவுபடுத்தி இருப்பது என்னவென்றால், தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தலைவராக தொடர்கிறார் என்பதுதான்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, தேர்தல் ஆணையத்தினுடைய நிலைப்பாட்டை எடுத்துச் சொல்ல இந்தத் தீர்ப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று கூறினார்.
