பாமகவில் இருந்து தமது மகனும் அக்கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் (PMK Anbumani Ramadoss) நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று (செப்டம்பர் 11) அதிரடியாக அறிவித்துள்ளார்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், பாமகவில் அன்புமணி தனி அணியாக செயல்பட்டார்; அவரிடம் 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. இரு முறை விளக்கம் கேட்டோம். ஆனால் இந்த நோட்டீஸுக்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என ஏற்றுக் கொள்கிறோம்.
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்
இதனையடுத்து பாமகவின் செயல் தலைவர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். அன்புமணியுடன் 10 அல்லது 15 பேர்தான் உள்ளனர். அன்புமணியுடன் தொடர்பு வைத்திருந்தால் அவர்களும் பாமகவில் இருந்து நீக்கப்படுவர். அன்புமணியுடன் உள்ளவர்கள் திருந்த வாய்ப்பு கொடுப்போம்; அவர்கள் திருந்தினால் அவர்களை சேர்த்து கொள்ளவும் தயார். நான் இல்லாமல் அன்புமணியோ அவருடன் இருப்பவர்களோ இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது” என்றார்,
என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது
மேலும், பாமக தொடங்கியது முதல் இதுவரை யாருமே செய்யாத அளவுக்கு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் அன்புமணி. அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அன்புமணி. இன்று முதல் எனது பெயரின் முதல் எழுத்தான ‘இரா’ என்பதை மட்டுமே அன்புமணி பயன்படுத்த வேண்டும்; இராமதாஸ் என்ற என் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்
அதேபோல, அன்புமணி தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்தலாம். இதை ஏற்கனவே 3 முறை அன்புமணியிடம் கூறியிருக்கிறேன். இப்போதும் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்கிறேன்.
என் கட்சி பாமக- உரிமை கோர முடியாது
பாமக என்பது ராமதாஸ் என்ற தனிநபர் தொடங்கிய கட்சி. பாமக என்ற என் கட்சிக்கு உரிமை கொண்டாட என் மகன் உட்பட யாருக்குமே உரிமை கிடையாது. பாமகவில் இருந்து களை நீக்கப்பட்டுவிட்டது.
அன்புமணி தனி கட்சி தொடங்கினாலும் வளராது
அன்புமணியை நீக்கிவிட்டதால் பாமகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. அன்புமணி தனிக்கட்சியை தொடங்கினாலும் அது வளராது. என்னுடன் 40 முறை பேசியதாக அன்புமணி கூறி வருவது எல்லாம் பொய். அன்புமணியின் பொய் என்பது அண்டப் புளுகு; ஆகாசப் புளுகு. என் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது குறித்து விசாரணை நடைபெறுகிறது. அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது என்றும் ராமதாஸ் கூறினார்.
பின்னணி என்ன?
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். மேலும் அன்புமணியை செயல் தலைவர் எனவும் அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணி இதனை ஏற்க மறுத்தார்.
பாமகவின் தலைவராகவே தாம் தொடருகிறேன்; இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி தாமே பாமக தலைவர் என்றார் அன்புமணி.
இதனையடுத்து அன்புமணியின் ஆதரவாளர்கள் பலரையும் ராமதாஸ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அன்புமணியோ அவர்களே கட்சிப் பதவிகளில் நீடிப்பர் எனவும் அறிவித்தார். பாமகவின் பொதுக்குழுவை அன்புமணியும் ராமதாஸும் தனித்தனியே கூட்டி இருந்தனர். இதன் பின்னர் அன்புமணிக்கு எதிராக பாமக விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கையை ராமதாஸ் மேற்கொண்டார். இதற்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால் இன்று பாமகவில் இருந்தே அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அன்புமணியை நீக்கி டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை