’நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை’ : பிரதானுக்கு அன்பில் மகேஷ் காட்டிய ஆதாரம்!

Published On:

| By christopher

anbil mahesh denied dharmendra pradhan speech on nep 2020

தமிழக அரசு முதலில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துவிட்டு, பின்னர் பின் வாங்கியது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். anbil mahesh denied dharmendra pradhan speech on nep 2020

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. அப்போது மக்களவையில் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சில தமிழக எம்.பி-க்கள் என்னை நேரில் வந்து சந்தித்து பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தனர். பின்னர் தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி பேசுகிறார்கள்” என்று கையில் அப்போது தமிழக அரசு அனுப்பியிருந்த கடிதத்தை காட்டி கோபமாக பேசினார்.

ADVERTISEMENT

இதற்கு நாடாளுமன்றத்திலேயே கனிமொழி எம்.பி மறுப்பு தெரிவித்தார். அவர், “தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி நானும் தமிழக எம்.பி-க்களும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தோம். அப்போதே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. தேசிய கல்வி கொள்கை மும்மொழியை ஆதரிக்கிறது. ஆனால், தமிழகத்தில் இரு மொழி கொள்கையை பின்பற்றப்படும் என்று மத்திய அமைச்சரிடம் தெளிவாக விளக்கினோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களும் பிரதானின் பேச்சை கண்டித்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ், தமிழக அரசு அனுப்பிய கடிதம் குறித்து தர்மேந்திர பிரதானுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார்.

நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை! anbil mahesh denied dharmendra pradhan speech on nep 2020

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது. தமிழ்நாடு தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை (NEP 2020) எதிர்த்து வருகிறது. ஏனெனில் அது தமிழக அரசின் வெற்றிகரமான கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

ADVERTISEMENT

எங்களது “நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்” இல்லை. 15/3/2024 தேதியிட்ட கடிதம் புதிய கல்விக் கொள்கையை அங்கீகரிப்பதாக இல்லை. மாணவர்களுக்கு நன்மை பயக்கும் போது மட்டுமே தமிழக அரசு மத்திய திட்டங்களை அமல்படுத்துகிறது. எந்தவொரு திட்டத்தையும் அல்லது கட்டமைப்பையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில்லை.

ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படுத்துவது குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என்றும் அந்தக் கடிதம் தெளிவாகக் கூறுகிறது.

புதிய கல்விக் கொள்கையை திணித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் கல்வி விவகாரங்களில் அரசியல் செய்கின்றனர்.

தமிழ்நாட்டின் கல்வி மாதிரி முன்மாதிரியானது மற்றும் நமது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனை தொடர்ந்து நிரூபித்துள்ளது. உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானது, இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் பலம் தான், பலவீனம் அல்ல என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம், நீங்கள் உண்மையில் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்கிறீர்கள்” என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share