சிபிஐ விசாரணைக்கு பயந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து விட வேண்டாம் என்று விஜயை குறிப்பிடாமல் இயக்குநர் அமீர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது பேசு பொருளாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருவது மற்ற கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
NDA கூட்டணியில் இணைய அழைப்பு?
மத்திய ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) விஜய்யை இணைக்கத் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காக ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
விஜய் தரப்புக்கு வந்த சிபிஐ சம்மன்
இந்தச் சூழலில், கரூர் பெருந்துயர வழக்கு விசாரணைக்காக நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ், “பாஜக, தவெக-விற்கு அரசியல் ரீதியான அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளது” என்று குற்றம் சாட்டியிருந்தார். தற்போதைய சிபிஐ சம்மன் அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநரும் நடிகருமான அமீர், விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
“சிபிஐ விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிடாதீங்க. அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்.” என தெரிவித்துள்ளர்.
கொள்கை முடிவில் மாற்றம் வருமா?
தன்னுடைய முதல் மாநாட்டிலேயே “திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி” என விஜய் மிகத்தெளிவாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், சிபிஐ நெருக்கடிகள் மற்றும் கூட்டணிக் கோரிக்கைகளுக்கு மத்தியில் விஜய் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பாரா அல்லது புதிய அரசியல் வியூகங்களை வகுப்பாரா என்பதே தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
