ஹேமா குழு அறிக்கை பத்திரிகைகளில் வெளியானபிறகு நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றது, போதைப்பொருள் வைத்திருந்ததாகச் சில நடிகர்கள் கைதானது என்று தொடர்ச்சியாகப் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது ’அம்மா’ (AMMA) மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம். கடந்த ஓராண்டாகவே தற்காலிகக் குழுவின் நிர்வாகத்தின் கீழ் இச்சங்கம் இயங்குகிறது. AMMA election will be held on soon
சங்கத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றவர்களுக்கு எதிராகப் பாலியல் புகார்கள் பதிவானதையடுத்து, இந்த தற்காலிகக் குழு அமைக்கப்பட்டது. இதன் செயல்பாடு தொடரும் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று நடந்த ‘அம்மா’ பொதுக்குழு கூட்டத்தில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சங்கத் தலைவர் மோகன்லால்.
தற்காலிகக் குழுவில் உள்ளவர்களையே சங்கத்தில் பணியமர்த்தக் கூடும் என்று தகவல் வெளியான நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதனால், இன்னும் மூன்று மாதங்களில் சங்கத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொச்சியில் நடந்த இந்தக் கூட்டத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், சன்னி வெய்ன், ஜோஜு ஜார்ஜ், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சுரேஷ் கோபி, அம்பிகா, மல்லிகா சுகுமாரன், ஜகதீஷ், பாபுராஜ் போன்ற மூத்த கலைஞர்களுடன் ஜகதி ஸ்ரீகுமாரும் இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.
ஒரு விபத்தில் சிக்கி, தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு முழு ஓய்வில் இருந்து வரும் வரும் ஜகதி சுமார் 15 ஆண்டுகள் கழித்து நடிகர் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.
மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட மாட்டேன் என்று மோகன்லால் ஏற்கனவே தெரிவித்திருப்பதால், இந்த தேர்தலில் புதிதாகக் களமிறங்குபவர்கள் யார் என்றறிகிற ஆவல் ரசிகர்களிடத்திலும் அதிகமிருக்கிறது.