உடலுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நெல்லிக்காய் ரசம் (Amla Rasam) சாதம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இன்னும் சில வாரங்களில் தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கிவிடும். கோடைக் காலத்தில் நாம் அனைவரும் லேசான, எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். பலருக்கும் ரசம் சாப்பாடு என்பது பெரு விருப்பமாக இருக்கும். எனினும், பலரும் நெல்லிக்காய் ரசம் சாதம் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். நெல்லிக்காய் ரசம் சாதத்தை விரைவில் தயாரித்துவிடலாம். இது சுவையோடு உடலுக்கு மிகுந்த ஊட்டச்சத்தும் அளிக்கிறது.
நெல்லிக்காயில் உள்ள நன்மைகள்:
நெல்லிக்காயில் வைட்டமின் சி (Vitamin C) அதிகமாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரசம் சாதத்தில் சேர்க்கப்படும்போது, இது உணவிற்கு லேசான சுவையையும் புத்துணர்ச்சியூட்டும் சுவையையும் தருகிறது. இது உணவை மேலும் சத்தானதாகவும் ஆக்குகிறது.
எடையை குறைக்க உதவி புரிகிறது:
எடையை குறைக்கும் (Weight Loss Recipe) முயற்சியில் இருப்பவர்கள் நெல்லிக்காய் ரசம் சாதம் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் எண்ணெய் குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்றை கனமாக்காது என்பதோடு, எளிதில் செரிமானமாகிவிடும்.
தேவையான பொருட்கள் (ingredients) :
- நெல்லிக்காய்
- தக்காளி
- பூண்டு
- கருப்பு மிளகு
- சீரகம்
- கொத்தமல்லி விதைகள்
- அரிசி
- துவரம் பருப்பு
- ரசம் மசாலா
ரசம் சாதம் தயாரிப்பது எப்படி?:
முதலில் புதிய நெல்லிக்காய் மற்றும் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். இதன்பிறகு பூண்டு, கருப்பு மிளகு, சீரகம் மற்றும் கொத்தமல்லி விதைகளை லேசாக நசுக்க வேண்டும். பின்னர், நறுக்கிய நெல்லிக்காய் மற்றும் தக்காளியைச் சேர்த்து அரைக்கலாம். குக்கர் அல்லது வாணலியில் சிறிது நெய்யை சூடாக்கி, கடுகு போடவும். பிறகு நெல்லிக்காய் மற்றும் தக்காளி விழுதை (amla and tomato paste) இட்டு சிறிது ரசம் மசாலாவைச் சேர்க்க வேண்டும்.
கழுவிய அரிசி மற்றும் துவரம் பருப்பு (Black gram) சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்க வேண்டும். சுவையை அதிகரிக்க விரும்பினால் சில சிறிய நெல்லிக்காய் துண்டுகளைச் சேர்க்கலாம். பின்னர் குக்கரை மூடி, அரிசி மற்றும் பருப்பு வேகும் வரை சமைக்க வேண்டும். வெந்தவுடன், கொத்தமல்லி இலைகளைத் தூவி சூடாகப் பரிமாறலாம்.
குறுகிய நேரத்தில் சத்தான உணவு சமைக்க வேண்டும் என்போருக்கு நெல்லிக்காய் ரசம் சாதம் (Amla Rasam Rice) பொருத்தமாக இருக்கும். நெல்லிக்காய் ரசம் சாதத்தை ஒரே பாத்திரத்தில் சமைத்துவிடலாம் என்பதோடு, சுவையோடும் ஆரோக்கியமாகவும் அது இருக்கும். நீங்களும் வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள் மக்களே.
