மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 22) திருநெல்வேலி வருகை தருகிறார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்தில் பங்கேற்றுவிட்டு, பாஜகவின் பூத் முகவர்கள் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்கிறார்.
தென் தமிழகத்தின் 30 சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் மாநாடு நெல்லையில் இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
கேரளாவில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகை தரும் அமித்ஷா, ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை வந்தடைகிறார்.
பாளையங்கோட்டையில் இருந்து பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு அமித்ஷா செல்கிறார். அங்கு அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது.
இதன் பின்னர் வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலை வழியாக பூத் முகவர்கள் மாநாடு நடைபெறும் மாநாட்டுக்கு வந்து சேருகிறார் அமித்ஷா. இந்த மாநாட்டில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனைகளை வழங்குவார்.
இன்றைய பூத் முகவர்கள் மாநாட்டில் பூத் முகவர்களுடன் பாஜகவினரும் பங்கேற்கின்றனர். சுமார் 50,000 பேர் பங்கேற்கும் மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமித்ஷாவின் வருகையை ஒட்டி பாளையங்கோட்டை முதல் மாநாடு நடைபெறும் இடம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
