விஜய் அகந்தையுடன் பேசுகிறார் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சனிக்கிழமைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது திமுகவையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்தநிலையில் விஜய்யின் திமுக எதிர்ப்பு பேச்சு குறித்து இன்று (செப்டம்பர் 22) நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், “நடிகர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் சிஎம் அங்கிள்… சிஎம் சார் என்றெல்லாம் பேசுகிறார். அவருடைய வார்த்தையில் அகந்தை அதிகமாக இருக்கிறது. என்ன தைரியத்தில் இந்த அகந்தை வருகிறது.
அமித்ஷா சொல்லித்தான் புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். பின்புலத்தில் அமித்ஷா பாஜக இருக்கும் தைரியத்தில் தான் இப்படியெல்லாம் பேசுகிறார். வருமான வரித்துறையில் இணை ஆணையராக இருந்த அருண் ராஜ் அவரது கட்சியில் சேர்ந்திருக்கிறார்.
அந்த தொடர்பில் மோடி, அமித்ஷா வழிகாட்டுதலின் படிதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
ஒன்றிய அரசு மூலமாக தனி விமானமே கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் இதுபோன்று கண்டிஷன் போட்டு பாருங்களேன் என்று விஜய் சொல்வதிலிருந்தே அவரை மோடி, அமித்ஷா தான் இயக்குகிறார்கள் என்பது தெரியவருகிறது.
அவருக்கு அரசியல் அடிப்படையே தெரியவில்லை. பிரதமர், உள்துறை அமைச்சருக்கு இருக்கும் ப்ரோட்டோகால் என்ன? இவருக்கு இருப்பது என்ன?.
பிரதமரை, முதல்வரை பற்றி பேசும் போது கன்னியகுறைவாக பேசக்கூடாது. மாண்புமிகு என்று தான் பேச வேண்டும். சிறுபிள்ளை தனமாக பேசுகிறார் என மக்கள் நினைக்கிறார்கள்.
முதல்வரை, பிரதமரை விமர்சிக்கும் போது கண்ணியத்துடன், கவனத்துடன் பேச வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு ஆளும் கட்சி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயப்படுபவர்களுக்கு தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை” என்று கூறினார்.