திருச்சி துறையூரில் நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
வரும் 2026 சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பொதுக் கூட்டங்களின் போது, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்தைக் கலைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அனுப்பி வைக்கப்படுவதாக வேலூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கண்டனமும் தெரிவித்திருந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியனும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட்-24) திருச்சி துறையூர் பகுதியில் ஆத்தூர் சாலையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அந்த பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சென்றது. இதையடுத்து அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழி மறித்து ஆம்புலன்ஸையும், ஊழியர்களையும் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, காயமடைந்த ஓட்டுநர் செந்தில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிமுக கூட்டத்திற்குள் ஒருவர் மயங்கி விழுந்ததாக அழைப்பு வந்ததால் அங்கே சென்றதாகவும், தன்னை மட்டுமல்லாது, 8 மாத கர்ப்பிணியான ஆம்புலன்ஸ் உதவியாளரையும் அதிமுகவினர் தாக்கியதாக ஓட்டுநர் செந்தில்குமார் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் காப்பாற்ற சென்ற எங்களுக்கே இந்த நிலை என்றால் பொது மக்களுக்கு என்ன நிலை என்று தெரியவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.