அமேசான் நிறுவனம் அதன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுமார் 30,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் என்பது உலகளவில் மிகவும் பிரபலமான பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். அமெரிக்காவில் ஒரு ஆன்லைன் சில்லறை விற்பனையாளராகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது ஈ-காமர்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ள அமேசானில் தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக கொரோனா தொற்றுநோயின் போது ஏற்பட்ட அதிக தேவை காரணமாக, நிறுவனம் அதிக அளவில் ஊழியர்களை பணிக்கு எடுத்தது.
இந்த நிலையில் தற்போது செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது அமேசான்.
அதன்படி இன்று முதல் பணி நீக்க நடவடிக்கை தொடங்கப்படும் என்றும், சுமார் 30,000 கார்ப்பரேட் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அமேசானின் கார்ப்பரேட் ஊழியர்களில் கிட்டத்தட்ட 10% ஆகும்.
மனிதவளம் (Human Resources), செயல்பாடுகள் (Operations), சாதனங்கள் மற்றும் சேவைகள் (Devices and Services), அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உள்ளிட்ட பல பிரிவுகளில் பணி நீக்கங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
AI தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் நிறுவனத்தின் செயல்முறைகளை மேம்படுத்தி, செலவுகளைக் குறைப்பது என அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
