ADVERTISEMENT

துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்? – ஆளூர் ஷாநவாஸ் காட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Aloor Sha Navas criticizes TVK leader Vijay

கரூர் விஜய் பரப்புரையில் 40 பேர் உயிரிழந்த நிலையில் துயரம் நடந்து விட்ட பிறகும் கூட, தன் தொண்டர்களை மீட்கவோ காக்கவோ களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒளிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம் என ஆளூர் ஷாநவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாவாஸ் தனது எக்ஸ் பதிவில், “கரூர் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.

ADVERTISEMENT

இத்தகைய துயர நிலைக்கு அடிப்படை காரணமே விஜய்யின் பொறுப்பற்ற அரசியலாகும்.

விஜய்க்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதால் தான் அதை முறைப்படுத்த காவல்துறையும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதை அரசியல் பழிவாங்கலாக சித்தரித்தார் விஜய். அவருக்கு ஆதரவாக பேசும் மூத்த பத்திரிகையாளர்களும் கூட, கட்டுப்பாடுகளை விஜய் மீற வேண்டும் என்று உசுப்பிவிட்டனர். எனவே, விஜய் தொண்டர்களிடம் காவல்துறை கட்டுப்பாடுகள் மீது எதிர்மறை எண்ணம் வலுத்து, அவற்றை அவர்கள் பின்பற்றாத நிலையும் உருவானது.

ADVERTISEMENT

எந்த அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தினாலும் அங்கு கூடுவோருக்கு அந்தந்த கட்சிகள் தான் பொறுப்பு ஏற்கின்றன. விஜய் கூட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றமும் இதை கூறியுள்ளது. அப்படி இருக்க, குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் பல மணி நேரம் தாமதமாக விஜய் வந்தது, உணவு தண்ணீர் இன்றி அங்கு மக்கள் தவித்தது, அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு கூட்டம் கூடியது, கரூர் கூட்டத்திற்கு திண்டுக்கல், சேலம், திருப்பூர், நாமக்கல் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் திரண்டது, நீதிமன்ற உத்தரவை மீறி குழந்தைகளுடன் வந்தது, ஜெனரேட்டர் பகுதியை சூறையாடியது, உயரமான கட்டடங்களில் ஏறி அசம்பாவிதம் ஏற்படுத்தியது, காப்பாற்ற வந்த ஆம்புலன்சை தாக்கியது என்று முழுக்க முழுக்க ஒழுங்கீனமும் விதிமீறலும் செய்துள்ளது தவெக.

துயரம் நடந்துவிட்ட பிறகும் கூட, தன் தொண்டர்களை மீட்கவோ காக்கவோ களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த கட்சி நிர்வாகமும் ஓடிப்போய் ஒளிந்தது அரசியல் அரங்கில் இதுவரை நாம் காணாத அவலம்.

சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான முதலமைச்சர் உடனே கரூர் விரைகிறார். கூட்டத்தை கூட்டிய விஜய் மறுநொடியே சென்னை வீட்டிற்கு விரைகிறார். அரசியல் என்பது ஒரு நாள் கூத்தல்ல; ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டிய வேள்வி.

நெருக்கடிகளையும் சவால்களையும் துயரங்களையும் எதிர்கொள்வதே அரசியல். அந்தத் துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?” என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share