நாங்கள் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுப்படுத்த விரும்புகிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. ஆனால் இதுவரை சம்பவ இடத்தில் பேசிய விஜய் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் விஜய் கூட்டணிக்கு வர மறுத்தால் பாஜக சிபிஐ மூலம் நெருக்கடி கொடுக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நியூஸ் 18 குழுமத்திற்கு பேட்டி அளித்துள்ள அமித்ஷாவிடம், விஜய்யுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமித்ஷா, “நாங்கள் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுப்படுத்த விரும்புகிறோம். இது தொடர்பாக எந்த முடிவுகள் எடுக்கப்பட்டாலும், அது கூட்டணி கட்சிகளுடன் அமர்ந்து பேசிதான் எடுக்கப்படும்.” என்றார்.
அப்படியெனில் விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததை நீங்கள் மறுக்கவில்லையா? என்ற கேள்விக்கு “விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று நான் சொல்லவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வெற்றியை உறுதி செய்வோம்” என்று கூறியுள்ளார்.
அமித்ஷாவின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக நேந்று (அக்டோபர் 29) செய்தியாளர்களிடம் பேசிய தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி நிர்மல் குமார், “ஒரு மாதத்துக்கு முன்பிருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
