பாமக இடம் பெற்றால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்ற விசிக முடிவு மாறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை பேசுவதற்கு விசிக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் ராமதாஸ் பாமக இணையக் கூடும் என கூறப்பட்டது.
ஆனால், பாமக மற்றும் பாஜக இடம் பெறும் எந்த கூட்டணியிலும் விசிக இடம் பெறாது; பாமக இடம் பெற்றால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கூறியிருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ராமதாஸ்- திருமாவளவன் இருவரும் நேருக்கு நேராக உட்கார்ந்து பேசினால் போதும்; விசிகவின் நிலைப்பாடு நிச்சயம் மாறும் என கூறியிருந்தார்.
இதற்கு விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக விசிக எம்.எல்.ஏ. திருப்போரூர் எஸ்.எஸ். பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில், “ கூட்டணியில் யார்யார் என்பதை திமுக முடிவெடுக்கும் என்பதைதான் நாங்களும் சொல்லி விட்டோமே.
சாதியவாத மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை” என செல்வப்பெருந்தகைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
