திமுக அரசு ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்ப்பு தெரிவித்து வருவதன் மூலம் தமிழக மக்களுக்கான திட்டங்களை தடுக்கிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை முதலிப்பாளையம் பகுதியில் உள்ள எம்.என்.சி.ஆர் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கோவை கோட்ட அணி பிரிவுகள், மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கோயம்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை நகர் மற்றும் நீலகிரி கோட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ” பாஜக அரசின் திட்டங்கள் விவசாயிகள் இளைஞர்கள் ஏழை எளிய மக்கள் மகளிர் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வகுக்கப்பட்டது. குறிப்பாக மகளிர் முன்னிறுத்தி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு உதாரணம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் மசோதாவாக 33 சதவீத இட ஒதுக்கீட்டை முதல் சட்டமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இயற்றினோம்.
மத்திய அரசு தமிழகத்திற்கு சரியான நிதி பங்கீடு கொடுக்கவில்லை என பொய்யான பிரச்சாரத்தை முதல்வர் பரப்புகிறார். மாநில திமுக அரசு வரி செலுத்தும் கோயம்புத்தூர் மக்களுக்கு மட்டுமே அனைத்து திட்டங்களையும் வழங்குவோம் என்றால் சரியா.. அரியலூர் போன்ற மாவட்டங்கள் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினார்.
அதுமட்டும் இல்லாமல் தமிழக மக்களுக்கு நன்மை கிடைத்து விடக்கூடாது என்பதற்காக மோடிக்கு எதிராக திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும், நீதிமன்றங்களை நாடியும் முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டினார்.
கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் வேண்டும் என கேட்கின்றனர். ஆனால் தமிழகத்தில் எதிர்க்கின்றனர். நீட் வந்த காலத்தில் இருந்து எதிர்க்கிறார்கள். ஆனால் நீட்டால் ஏழை கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இவர்கள் சொந்தக்காரர்கள் மூலம் கல்லூரி நடத்தி பணம் சம்பாதித்து வந்ததை மாற்றியுள்ளோம் என்றார்.
மேலும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாத கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. தேசியத்தையும் ஆன்மீகத்தையும் மனதில் வைத்து நடக்கும் கட்சி பாஜக மட்டும் தான் எனவும் தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர் திட்டத்தால் சீர்திருத்தம் வருவதை கண்டு ஏன் திமுகவிற்கு பயம், கலக்கம் ஏற்படுகின்றது. பல விஷயங்களில் அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது பலவீனத்தை காட்டுகிறது.
