“டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யக்கூடாது, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். allahabad high court lawyers
கடந்த மார்ச் 14ம்-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்தநிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க, மூன்று பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்தார். இந்தநிலையில், உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அனில் திவாரி,
“அலகாபாத் உயர்நீதிமன்றம் ஊழல் நிறைந்த நீதிபதிகளை மாற்றக்கூடிய ஒரு குப்பைத் தொட்டி அல்ல. நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரது வீட்டிலிருந்து பணம் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.
நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறை வெளிப்படையாக இல்லை. நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிற்கு அனுப்ப உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். allahabad high court lawyers