ஒன்றிய பாஜக அரசு செய்வது துரோகம் என்றால் திமுக அரசு செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்றுவேலைதான், ஜனநாயக குற்றம்தான் என விஜய் விமர்சித்துள்ளார்.
திருச்சியை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 13) இரவு அரியலூர் மக்களை சந்தித்து தனது பரப்புரையை மேற்கொண்டார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.
அப்போது அவர் மத்திய பாஜக அரசையும், ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
ரீல் அறுந்து போய்விட்டது!
அவர் பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு செய்வது துரோகம் என்றால் திமுக அரசு செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்றுவேலைதான், ஜனநாயக குற்றம்தான். ஏமாற்றுவதில் இருவருமே ஒரே வகையறாதான் ஒன்றிய பிரதமர், இந்தியப் பிரதமர் என்று மாற்றி மாற்றி பேசுவதில் முதல்வர் வல்லவர். மறைமுக உறவுக்காரர்கள் என ஏன் சொல்கிறோம் என இப்போது புரிகிறதா?
கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியது? முக்கால்வாசி கூட நிறைவேற்றாமல், ‘எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம்’ என கதை விடுகிறீர்களே My Dear CM Sir…
உங்களுக்குதான் ஆசையா, பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டுதே My Dear CM Sir…” என மதுரை மாநாட்டில் தான் அங்கிள் ஸ்டாலின் என பேசியது விமர்சனத்துக்கு உள்ளானதை சூசகமாக சுட்டிக்காட்டினார் விஜய்.
”ரீல்ஸ் வேறு ரியாலிட்டி வேறு என நீங்களே சொல்லிவிட்டு, இன்று நீங்கள் விடுவதெல்லாம் ரீல்ஸ்தான். அதில் பாதி அறுந்தும் போய்விட்டது. அப்படி அறுந்து போனது எவையெல்லாம் தெரியுமா? எனக் கூறி திமுக-வின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டார் விஜய்.
அனைவருக்கும் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.1000, டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, 10 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது, மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள், மீனவர் கிராமங்களில் மீன் உலர்த்தும் தளங்கள் நெசவாளர்களுக்கு வட்டி குறைப்பு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் மானியம், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தம் போன்ற திமுக வாக்குறுதிகளை கூறி செய்தீர்களா என அரசை நோக்கி கேள்விகளை அடுக்கினார் விஜய். அதற்கு இல்லை என்றனர் அங்கிருந்த தொண்டர்கள்.
அரியலூருக்கு செய்தது என்ன?
தொடர்ந்து அவர் அரியலூர் மாவட்டம் குறித்து பேசுகையில், “வறட்சியான மாவட்டங்களில் முதல் மாவட்டமாக உள்ளது அரியலூர். சிமெண்ட் உற்பத்தி, முந்திரி தொழில், பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. சிமெண்ட் ஆலைகளால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
யுனெஸ்கோவால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை முறையாக பராமரிக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படவில்லை. மருதையாற்றத்தின் குறுக்கே வாரணவாசி தடுப்பணை கட்டுவது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற கோரிக்கை என்னவானது? இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தும் போதுமான பேருந்து சேவை இல்லாதது ஏன்?” என விஜய் கேள்வி எழுப்பினார்.
குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம்!
அதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்தால், தனது வாக்குறுதியாக, “ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி; மனசாட்சி உள்ள மக்களாட்சி… இதுதான் நமக்கு வேண்டும். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்!” எனக்கூறி விஜய் தன் பேச்சை முடித்தார்.