ஆழப்புழா ஜிம்கானா : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

alappuzha gymkhana movie review april 2025

‘பஞ்ச்’ அனுபவம் தருகிறதா ’குத்துசண்டை’ கதை?!

மலையாளத் திரையுலகில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட வகைமையில் அமைந்த, வழக்கத்திற்கு மாறான கதை சொல்லலைக் கொண்ட, கமர்ஷியல் ரசிகர்களையும் ஈர்க்கிற வகையில் ‘கிளாஸ்’ ஆன திரையனுபவங்களை வழங்குவதில் வல்லவர்களாகத் திகழும் மிகச்சில படைப்பாளிகளில் ஒருவர், இயக்குனர் காலித் ரஹ்மான். அனுராக கரிக்கின் வெள்ளம், உண்டா, லவ் என்று அவர் தந்த படங்களே அதற்கான உதாரணங்கள். அவர் இயக்கிய ‘தள்ளுமாலா’ திரைப்படம் தொழில்நுட்ப உள்ளடக்கத்தில் அசுரப் பாய்ச்சலை நிகழ்த்தியிருந்தது. alappuzha gymkhana movie review april 2025

இந்த நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் ‘பிரேமலு’ நாயகன் நஸ்லென், லுக்மென் ஆவரன், கணபதி, சந்தீப் பிரதீப், பிரான்கோ பிரான்சிஸ், ஹபீஷ் ரஹ்மான், அனகா ரவி, நந்தா நிஷாந்த், நோய்லா பிரான்சி, சிவா ஹரிஹரன், ஷோன் ஜாய், கார்த்திக் என்று இளையோர் கூட்டமொன்று திரளாகத் தோன்றியிருக்கிற படமான ‘ஆலப்புழா ஜிம்கானா’, விஷு பண்டிகையையொட்டி தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

குத்துச்சண்டை போட்டியைப் பிரதானமாகக் கொண்டிருக்கிறது இப்படத்தின் திரைக்கதை.

சரி, ‘ஆலப்புழா ஜிம்கானா’ தரும் திரையனுபவம் சுவாரசியமானதாக உள்ளதா? படம் நம்மைத் திருப்தியில் ஆழ்த்துகிறதா?

 alappuzha gymkhana movie review april 2025

இறுதியில் கிடைப்பது..! alappuzha gymkhana movie review april 2025

ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஒரு ஊரில் வாழ்ந்து வருகிறார் ஜோஜோ ஜான்சன் (நஸ்லென்). பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அவரும் அவரது நண்பர்கள் சிலரும் தோல்வியடைந்திருக்கின்றனர். மீண்டும் தேர்ச்சி பெற்று ஒரே கல்லூரியில் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டுமென்று முடிவு செய்கின்றனர். ’விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதுதான் அதற்கான ஒரே வழி’ என்று கருதுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு, ‘குத்துச்சண்டையில நாம கில்லி ஆகலாம்’ என்கிறார் ஜோஜோ. உடனிருக்கும் ஷிபாஸ் அலி, டேவிட் ஜான், ஷாநவாஸ், ஷிபாஸ் அகமத் நால்வருக்கும் அதில் பெரிதாக உடன்பாடு இல்லை. ஆனாலும், ஐவரும் ஒன்றாக ‘ஆலப்புழா ஜிம்கானா’ எனும் குத்துச்சண்டை கிளப்பில் பயிற்சி பெறச் செல்கின்றனர்.

சில பல சோதனைகளுக்குப் பிறகு, அவர்கள் கிளப்பில் சேர்க்கப்படுகின்றனர். தேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற ஆண்டனி ஜோஷ்வா (லுக்மென் ஆவரன்) அவர்களுக்குப் பயிற்சி தருகிறார். அவரும் கூடத் தற்போது தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெறுகிற வரிசையில் இருப்பவர் தான்.

ஜோஷ்வாவின் பயிற்சியின் கீழ் அவர்கள் குத்துச்சண்டை குறித்துக் கற்றுக்கொள்வதை விட, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிகளில் பங்கேற்கிறபோது நிறையவே பாடங்கள் கற்கின்றனர். ஆனால், அவற்றில் பலவற்றைத் தோல்விகளே பரிசளிக்கின்றன.

இறுதியில் அவர்களுக்குக் கிடைப்பது என்ன என்று சொல்கிற ’ஆலப்புழா ஜிம்கானா’ படத்தின் மீதி.

விளையாட்டை மையமாகக் கொண்ட படங்களுக்கென்று சில ‘க்ளிஷே’ காட்சிகள், ஷாட்கள் இருக்கும். மாண்டேஜ் பாடல்கள், கிளைமேக்ஸ் காட்சியமைப்பு போன்றவையும் கூட இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் சொல்லிவிட முடியும். ’அதற்கென ஒரு பார்முலா இருக்கிறது’ என்று சொல்லும் அளவுக்குக் கடந்த காலத்தில் சில ‘ஸ்போர்ட்ஸ்’ படங்கள் அனுபவங்களைத் தந்ததுண்டு.

ஆனால், ‘ஆலப்புழா ஜிம்கானா’ திரைப்படம் அந்த ‘க்ளிஷே’க்களை மீற வேண்டும் என்ற நோக்கோடு படைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத திரைக்கதையோடு கலகலப்பை நிறைக்கிற வசனங்களோடு, கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சியமைப்போடு இருக்க வேண்டுமென்ற உறுதியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் அவையே இருக்கின்றன.

அடிபொலி.. சரவெடி..! alappuzha gymkhana movie review april 2025

‘ஆலப்புழா ஜிம்கானா’ படம் திரையில் ஓடத் தொடங்கியது முதல் இறுதி ஷாட் வரை நாம் ‘ப்ரெஷ்’ஷாக உணர இரண்டு பேர் முக்கியக் காரணிகளாக உள்ளனர். அதில் முதலாமவர் ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித், இரண்டாமவர் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்.

வீடு, ஹோட்டல், பார்ட்டி நடைபெறும் இடம், குத்துச்சண்டை கிளப் என்று ஒவ்வொரு இடமாக நகர்ந்து, இடைவேளை பிளாக்கில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் அரங்கத்தைத் திரையில் காட்டுகிறது ஒளிப்பதிவு. அங்கு நேரில் சென்று வந்த உணர்வைத் தருகிறது.

அந்த களங்கள் ஒவ்வொன்றையும் ‘ஸ்டைலிஷாக’ காட்ட மெனக்கெட்டிருக்கிறார் ஜிம்ஷி காலித்.

விஷ்ணு விஜய்யின் இசையில் பாடல்கள் ‘அடிபொலி’, ‘சரவெடி’ ரகத்தில் இருக்கின்றன. அதிலும் ’பஞ்சாரா பஞ்ச்’, ‘பொட்டு பொட்டு’ பாடல்கள் காட்சிகளின் பின்னணியில் ஒலித்தாலும் நாம் முனுமுனுக்கிற வண்ணம் இருக்கின்றன.

பின்னணி இசையோ குத்துச்சண்டை போட்டிகளில் நாமே களமிறங்கியது போன்ற உணர்வெழுச்சியை ஊட்டுகின்றன.

கலை இயக்குனர் ஆஷிக், ஆடியோகிராஃபியை கையாண்டிருக்கும் விஷ்ணு கோவிந்த், ஆடை வடிவமைப்பாளர் மஷார் ஹம்சா, ஸ்டண்ட் கொரியோகிராஃபி செய்திருக்கும் ஜோபில் லால் மற்றும் கலை கிங்ஸன் மற்றும் படத்தில் பணியாற்றிய விஎஃப்எக்ஸ், டிஐ நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவருமே ரசித்து, லயித்து, காதலித்துப் பணியாற்றியது திரையில் தெளிவாகப் புலனாகிறது.

சம்பந்தப்பட்ட கலைஞர்களின் ’செம்மையான’ காதலால் மட்டுமே, ஒரு காட்சி சரியான வார்ப்பைப் பெறும் என்பது எனது நம்பிக்கை. இப்படத்தில் அப்படிச் சொல்லிக்கொள்ளும்படியாகப் பல காட்சிகள் இருக்கின்றன.

‘ஸ்போர்ட்ஸ் படங்கள் இப்படித்தான் இருக்கும்’ என்ற வரையறையை உடைக்கிற இயக்குனர் காலித் ரஹ்மானின் கதையைச் சரியாகத் திரையில் கடத்தும் வண்ணம் திரைக்கதையாக்கத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார் ஸ்ரீனி சசீந்திரன்.

’ஏன் அந்த வழக்கமான பார்முலாவை சிதறடிக்க வேண்டும்’ என்பவர்களுக்கு இப்படம் தரும் திரையனுபவம் உவப்பானதாக இராது.

’ஆலப்புழா ஜிம்கானா’வை திரளாகப் பார்க்க மக்கள் வருவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, இதில் நடித்திருக்கும் நடிப்பு பட்டாளம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ‘பெர்பார்மன்ஸால்’ நம்மை அசரடிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ’ரசிக வட்டம்’ அமையும் அளவுக்கு வார்க்கப்பட்டிருக்கிறது எழுத்தாக்கம்.

ரதீஷ் ரவியின் வசனங்கள் ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டே  இருக்கின்றன. அவற்றில் பல குத்துச்சண்டை போட்டிகு நடுவே வார்த்தைகளால் ஆன ‘பஞ்ச்’களாக உள்ளன.

ஜோஜோ ஆக வரும் நஸ்லென், ஜோஷ்வா ஆக வரும் லுக்மென் ஆவரன், தீபக் ஆக வரும் கணபதி, ஷிபாஸ் அகமதுவாக வரும் சந்தீப் பிரதீப், ஷிபாஸ் அலியாக வரும் பிரான்கோ பிரான்சிஸ், டேவிட் ஜான் ஆக வரும் ஹபீஷ் ரஹ்மான், ஷாநவாஸ் ஆக வரும் சிவா ஹரிஹரன், கிரணாக வரும் ஷோன் ஜாய், கிறிஸ்டோபராக வரும் கார்த்திக் என்று இதில் நடித்த ‘குத்துச்சண்டை’ பட்டாளம் அனைவருக்கும் முக்கியத்துவம் தருகிற காட்சிகள், ஷாட்கள் படத்தில் உண்டு.

அதேநேரத்தில், படத்தில் எதிரணி வீரர்களுக்குப் பெரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பாத்திரப் பெயர்கள் கூடப் பெரிதாகச் சொல்லப்படவில்லை. ‘எதுக்கு படத்தோட நீளத்தை அதிகமாக்கணும்; பிறகு குறைக்க முடியாம திணறணும்’ என்று அதனைத் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். alappuzha gymkhana movie review april 2025

அதனால், நாயகர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்தால் போதும் என்று விட்டிருக்கிறார்.

இந்த திரைக்கதையில் நாயகிகள் அனகா ரவி, நந்தா நிஷாந்த், நோய்லா பிரான்சிக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகளும் உண்டு. ஆனால், அவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு.

இது போகச் சில மூத்த கலைஞர்களோடு ஒரே ஒரு காட்சியில் தலைகாட்டியிருக்கிறார் ஷைன் டாம் சாக்கோ.

’விஷு’ வெளியீடாக வந்த படங்களில், ‘ஜாலியா தியேட்டருக்கு போய்ட்டு வரலாம்’ என்ற நம்பிக்கையை ரசிகர்களிடத்தில் உருவாக்கியிருக்கிறது ‘ஆலப்புழா ஜிம்கானா’. ‘பெரியவர்கள் இதனை ரசிக்க மாட்டார்கள்’ என்று சொல்லவிடாமல் நல்லதொரு திரையனுபவத்தையும் தருகிறது இப்படம். முழுக்க இளையோர் இருந்தாலும், அதையே காரணமாக முன்வைத்து வன்முறையோ ஆபாசமோ இத்திரைக்கதையில் திணிக்கப்படாதது நல்லதொரு அம்சம். அதற்காகவே இயக்குனர் காலித் ரஹ்மானை தனியே பாராட்டலாம்! alappuzha gymkhana movie review april 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share