ஐந்து போட்டியில் தொடர் தோல்விகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. dhoni csk team register first win after 5 loss
லக்னோ ஏகனா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை இன்று (ஏப்ரல் 14) இரவு எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் கடந்த 6 போட்டிகளாக சொதப்பி வந்த கேப்டன் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 63 ரன்கள் குவித்தார்.

சென்னை அணி தரப்பில் பதிரானா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் 20 வயதான ஷைக் ரஷீத் ஐபிஎல் தொடரில் இன்று தொடக்க வீரராக அறிமுகம் ஆனார். சிறப்பாக பேட்டிங் செய்த அவர், இந்த போட்டியில் அதிகபட்சமாக 6 பவுண்டரிகளை விரட்டி, 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்த வந்த ராகுல் திரிபாதி (9), ஜடேஜா (7) மற்றும் விஜய் சங்கர் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
6வது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், ஷிவம் துபேவும் நிதானமாக அதே நேரத்தில் வெற்றியை நோக்கி அணியை வழிநடத்திச் சென்றனர்.
இந்த சீசனில் தடுமாறி வரும் துபே பொறுமையாக ஆட, தோனி வந்த வேகத்தில் பவுண்டரி சிக்சர் என தனது அதிரடி பேட்டிங்கை தொடர்ந்தார்.

கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் மட்டும் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என மொத்தம் 15 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், துபேவின் பவுண்டரியுடன் 168 ரன்கள் குவித்த நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே.
சென்னை அணி தரப்பில் ஆறாவது விக்கெட்டுக்கு இணைந்த தோனி (26*) – துபே (43*) ஜோடி 57 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 போட்டிகளால் தோல்விகளால் துவண்டிருந்த சென்னை அணி, 31 நாட்களுக்கு பிறகு தோனி தலைமையில் இன்று வெற்றியை ருசித்துள்ளது.