அஜித்குமார் லாக்கப் மரண வழக்கின் புகார்தாரரான நிகிதா மீதான மோசடி புகார்கள் தொடர்பாக அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. Nikitha Ajithkumar
அஜித்குமார் விவகாரத்தில் புகார் கொடுத்தவர் மதுரை பேராசிரியர் நிகிதா. திண்டுக்கல் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மதுரை திருமங்கலம் காவல் நிலையத்தில் நிகிதா குடும்பத்தினர் மீது மோசடி தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரையைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் நிகிதா மீது ரூ16 லட்சம் மோசடி புகாரைத் தெரிவித்திருந்தார். தற்போதும் அந்த ரூ16 லட்சம் பணத்தை திரும்பப் பெற தாம் போராடி வருவதாக கண்ணீருடன் ராஜாங்கம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வினோத் என்பவரும் நிகிதாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தது பற்றி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், எங்கள் மாமா தெய்வத்தின் மாணவிதான் நிகிதா. எனக்கு விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ8 லட்சம் பணம் கேட்டார் நிகிதா. நாங்கள் நிலப் பத்திரத்தை அடமானம் வைத்து பணத்தை ரெடி செய்து நிகிதாவிடம் கொடுத்தோம்.
அப்போது, நாங்கள் கொடுத்த ரூ8 லட்சத்தில் இருந்த ரூ100 நோட்டுகளை வாங்க முடியாது என மறுத்தார் நிகிதா. தமக்கு ரூ500 நோட்டுகளாக மட்டுமே வேண்டும் என்றும் நிகிதா அடம் பிடித்தார். இதனால் வேறுவழியே இல்லாமல் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் நிகிதா கேட்டபடியே ரூ500 நோட்டுகளாக மாற்றி மொத்தம் ரூ8 லட்சம் பணம் கொடுத்தோம். ஆனால் எங்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை. நாங்கள் கொடுத்த பணமும் கிடைக்கவில்லை.
இதனால் அன்று எஸ்பியாக இருந்த அஸ்ரா கார்க்கிடம் புகார் கொடுத்தோம். இந்த புகாரின் அடிப்படையில் நிகிதாவை எங்கள் கண் முன்னர்தான் போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் நிகிதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று நிகிதா ஜாலியாக இருக்கிறார். ரூ8 லட்சம் பணத்தைக் கொடுத்து ஏமாந்த நாங்கள் பரிதாபமாக நிற்கிறோம். நிகிதாவின் மகன் கவியரசுவின் மச்சான் பசும்பொன் பாண்டியன் என்பவர் தலையிட்டு பணம் எதுவும் உங்களுக்கு திருப்பி கிடைக்காது என மிரட்டினார் என வினோத் தெரிவித்தார்.