பிரபல நட்சத்திர நடிகர் நடிகையரின் பழைய படங்களை மீண்டும் வெளியிடுகிற வழக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்து வந்தது. டூரிங் டாக்கீஸ்கள் மூடல், தியேட்டர் உரிமையாளர்கள் வாரிசுகளிடையே மோதல் போன்ற பிரச்சனைகளால் சில பல ஆண்டுகள் கழித்து திரையிடுவதற்காக படப்பெட்டியைத் தூசு தட்டுவது அறவே நின்றுபோனது.
ஆனால், அதனை மீறிப் புதுப்பொலிவுடன் காட்சியாக்கம், ஒலி அமைப்பில் திருத்தம் செய்யப்பட்ட பழைய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. சிவாஜி நடித்த கர்ணன், வசந்த மாளிகை, எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் வசூலை அள்ளின.
அதன் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்கள் பலரது படங்கள் ‘4கே’ தரத்தில் ‘ரீரிலீஸ்’ கண்டு வருகின்றன. அப்படி வெளியான விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’ படங்கள் பெரும் வசூலைக் குவித்தன. அந்த வரிசையில் ரசிகர்களை ஈர்ப்பதற்காக, வரும் செப்டம்பர் 25ஆம் தேதியன்று ‘குஷி’ மீண்டும் வெளியாகவிருக்கிறது.
இன்னொரு பக்கம் அஜித்தின் ‘பில்லா’, ‘மங்காத்தா’ போன்ற படங்கள் அதிக தியேட்டர்களில் மீண்டும் வெளியாகின.
அதே போன்றதொரு வரவேற்பைப் பெறும் நோக்கோடு, சரண் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகாசம்’ படமும் ‘4கே’ தரத்தில் புதுப்பொலிவினைப் பெறவிருக்கிறது. அக்டோபர் 31 அன்று இது வெளியாகிறது.
கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியாகவிருப்பதால், அஜித் ரசிகர்கள் இப்போதே உற்சாகமாகிவிட்டனர்; எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதனை ‘ட்ரெண்ட்’ ஆக்கி வருகின்றனர்.
பரத்வாஜ் இசையில் ‘தெற்கு சீமையில என்னை பத்தி கேளு’, ‘உனக்கென்ன உனக்கென்ன’, ‘தல போல வருமா’ பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அது போக ‘பொள்ளாச்சி இளநீரே’, ‘நச்சென்று இச்சொன்று தந்தானே’ பாடல்களும் ஒருகாலத்தில் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டவை தான்.
இப்போது போலவே, இந்தப் படம் வெளியான காலகட்டத்திலும் ‘கார் ரேஸ்’களில் கலந்துகொள்வதில் ‘படுபயங்கர’ ஆர்வத்தோடு இருந்தார் அஜித். திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்திருந்தார்.
அப்படி வெளியான ‘அட்டகாசம்’, ’இந்த தீபாவளி தல தீபாவளி’ என்ற வரிகளோடு விளம்பரப்படுத்தப்பட்டது.
அப்போது தயாரிப்பு தரப்புக்குப் பெரும் லாபம் தந்த படம் என்ற தகவல் வெளியானது. இப்போது அதற்கான வரவேற்பு எப்படியிருக்கும் என்று தெரியாது.
அதேநேரத்தில், ‘கண்ணாடிய திருப்பி வச்சா ஆட்டோ எப்படிப்பா ஓடும்’ என்பது போன்ற ‘காமெடி’கள் ஜென்ஸீ தலைமுறையையும் நிச்சயம் கவரும் என்று உறுதியுடன் சொல்ல முடியும்..!