தவெக-வுக்கு அதிமுக ஓட்டு போகாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கி முதல் முறையாக 2026 தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதையொட்டி கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
அவரது பிரசார வாகனத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா படங்கள் இடம்பெற்றிருந்தன.
அதோடு, திமுக வாக்குறுதிகளை ஒவ்வொன்றாய் குறிப்பிட்டு சொன்னீர்களே செய்தீர்களா என ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுதொடர்பாக, சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தொடர்ச்சியாக எம்ஜிஆரை விஜய் முன்மொழிகிறாரே? என்ற கேள்விக்கு,
“ஒரு மாபெரும் தலைவர் படத்தை அவர் பயன்படுத்துகிறார் என்றால் அது வரவேற்கத்தக்க விஷயம் தான். அதே நேரத்தில் அவருக்கு ஓட்டுகள் வருமா வராதா என்பதுதான் கேள்வி. அண்ணா படத்தை பயன்படுத்துவதன் மூலமோ எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவதன் மூலமோ அதிமுக ஓட்டுகள் விஜய்க்கு போகாது என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன்.
எம். ஜி.ஆரை போற்றட்டும் வணங்கட்டும், பேருந்துகளில் அண்ணா எம்.ஜி.ஆர் படத்தை போட்டுகொள்ளட்டும், எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
அதேபோல அதிமுக ஓட்டு விஜய்க்கு போகுமா என்றால் ஒருகாலமும் போகாது.
விஜய்க்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். அது மட்டுமல்ல முன்னதாக ஸ்டாலினை அங்கிள் என்று பேசிய விஜய் இப்போது சி.எம்.சார் என்கிறார்.
எங்களை கேட்டிருந்தால் கூட லீடிங் கொடுத்திருப்போம். என்னை கேட்டிருந்தால் ஸ்டாலினை சாத்தான் என்றும், உதயநிதி ஸ்டாலினை குட்டி சாத்தான் என்றும் சொல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன்” என பதிலளித்தார்.