கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை சந்தித்தது அதிமுக. 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் பாஜகவுடன் அதிமுக கைகோர்த்துள்ளது. Aiadmk senior leaders hits out amit shah
இந்தநிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும். அதில் பாஜகவும் பங்கு வகிக்கும்” என்று தெரிவித்திருப்பது கூட்டணியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமித்ஷாவின் பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அளித்துள்ள பேட்டியில், “கூட்டணி என்பது வேறு, கட்சிகளின் கொள்கை என்பது வேறு. பொது எதிரியான திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தில் யாரெல்லாம் இசைவு தெரிவிக்கிறார்களோ அவர்களை அழைத்து அதிமுக கூட்டணி அமைத்து வருகிறது. தமிழகத்தில் கூட்டணி அரசு அமைந்ததாக இதுவரை சரித்திரமே இல்லை.
அப்படி ஒரு கூட்டணி அரசை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி அமைந்துள்ளது. அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுகுறித்து விரிவான விளக்கத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார்” என்றார்.
ராஜேந்திர பாலாஜி கூறும்போது, “எடப்பாடி பழனிசாமி தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர். இது தேசிய ஜனநாயக கூட்டணியின் தேசிய தலைமையால் எடுக்கப்பட்ட முடிவு. கூட்டணி குறித்தான முடிவுகளை எடப்பாடி பழனிசாமி தான் அறிவிப்பார். அவர் தான் கட்டளை தளபதி. அவரது கருத்து தான் இறுதி கருத்து” என்று தெரிவித்தார். Aiadmk senior leaders hits out amit shah