அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் செப்டம்பர் 5-ந் தேதி முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்த்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்பது செங்கோட்டையனின் குரல். இதனை நிராகரிப்பதால் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார். சட்டமன்றத்திலும் தனித்து செயல்பட்டார் செங்கோட்டையன்.
இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி-செங்கோட்டையன் இடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் மேட்டுப்பாளைய பிரசார நிகழ்ச்சியில் கூட செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
மேலும் செங்கோட்டையன் வரும் 5-ந் தேதி தமது ஆதரவாளர்களுடன் கோபிசெட்டிபாளையத்தில் ஆலோசனை நடத்த இருக்கிறாராம். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், முக்கியமான முடிவுகளை செங்கோட்டையன் அறிவிக்க கூடும் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.