அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்று பயணத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒதுங்கி இருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. Sengottaiyan Edappadi Palaniswami
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தமிழக அரசியல் கட்சியினர் தொடங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை நேற்று ஜூலை 7-ந் தேதி தொடங்கினார். இந்த நிகழ்வில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியதுடன் சுற்றுப் பயணத்திலும் கலந்து கொண்டனர்.
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், கடம்பூர் ராஜு , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் சபாநாயகர் தனபால் உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதே சமயம் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்படும் கே.ஏ. செங்கோட்டையன் இந்த சுற்று பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. செங்கோட்டையன் நேற்று காலை ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்தார். மாலையில் உடுமலை பகுதியில் சொந்த வேலைக்காக சென்றார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கட்சியின் முக்கிய நிகழ்ச்சி கோவையில் நடந்த நிலையில் அதில் செங்கோட்டையன் ஒதுங்கி இருப்பது கட்சிக்குள் இணக்கமான சூழல் இல்லை என்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பகிரங்க போர்க்கொடி தூக்கியவர் செங்கோட்டையன். பின்னர் இருவருக்கும் இடையேயான பிரச்சனை சுமூகமாக முடிந்ததாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
