ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் முதல் தெருநாய் பிரச்சினை வரை… அதிமுக தேர்தல் வாக்குறுதி – முக்கிய அம்சங்கள்!

Published On:

| By Kavi

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதில்,

ADVERTISEMENT

வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும்.

குல விளக்கு திட்டத்தின் மூலம்அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2,000 உதவித்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ADVERTISEMENT

நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும். 

“அம்மா இல்லம் திட்டம்” மூலம், கிராமப் புறங்களில் குடியிருப்பதற்கு வீட்டு மனையும், சொந்த வீடும் இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு, “அம்மா இல்லம் திட்டம்” மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டி விலையில்லாமல் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில், ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள்/மகள்கள் திருமணமாகி தனிக் குடித்தனம் செல்கின்றபோது, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, வீடுகள் கட்டித் தரப்படும்.

ADVERTISEMENT

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்

வேலைக்குச் செல்லும் 5 லட்சம் மகளிருக்கு ₹25,000 மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். 

முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். 

மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் கல்விக் கடன் பெற்று, வேலைவாய்ப்பு கிடைக்காமல், கடன் தவணையை செலுத்த முடியாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000-மும், 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.1,000-மும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவித் தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன், 1,000/- ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்து, சொந்த ஆட்டோ இல்லாதவர்கள், புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 75,000/- மானியமாக வழங்கப்படும்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு, குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் தரமான, விலையில்லா சேலையும், ஆண்களுக்கு தரமான வேட்டியும் வழங்கப்படும்.

இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர் பதன பெட்டி (Fridge) விலையில்லாமல் வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.

பேரறிஞர் அண்ணா கொள்கைப்படி ‘உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்பதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாரக மந்திரம். இந்தியா ஒரு வலுவான வல்லரசாக விளங்க, மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் மாநில அரசுகளும் அதற்கான நிதி, நிர்வாக உரிமைகளுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதற்கேற்ப, மாநில அரசுகளுக்கு உரிய நிதி நிர்வாகப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை.

மாநிலங்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசியலமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டு, மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பொறுப்புகளுடன் மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்படத் தேவையான நிதிப் பகிர்வுகளும், பொறுப்புகளும் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. எனவே, மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப, நிதிப் பகிர்வு முறையில் கூடுதல் நிதிப் பகிர்வை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

தொகுதிகள் மறுசீரமைப்பில் தமிழ் நாட்டிற்கான தற்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் இருக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கல்வி, மருத்துவம் போன்ற மனிதவள மேம்பாட்டிற்கு உதவும் முக்கிய துறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் – பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாடு தொடரும். 

மத்திய வரி வசூலில், மேல் வரி, கூடுதல் வரி (Cess, Surcharge) மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் சேர்க்கப்படாமல், அதை வசூலித்து முழுவதும் மத்திய அரசே பயன்படுத்துவதால், செஸ் மற்றும் சர்சார்ஜ் போன்ற வரிகள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாடு தொடரும். அதை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கடந்த 5 ஆண்டுகளில் துறைகள்தோறும் புரையோடியுள்ள ஊழலைக் கண்டறிந்து, மக்கள் வரிப் பணத்தைச் சுரண்டி ஊழல் செய்த அலுவலர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, ஏற்கெனவே ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முறையான நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் உட்படுத்தப்படுவார்கள்.

தமிழ் நாட்டில் உள்ள ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள், அந்த நிலங்களுக்கு நிர்ணயிக்கும் தொகையை செலுத்தினால், அவர்களுக்கு அரசு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

நெல் உற்பத்திச் செலவை கருத்தில்கொண்டு விவசாயிகள் நலனுக்காக நெல்லுக்கு தற்போது வழங்கி வரும் ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500/- என விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவை கருத்தில்கொண்டு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500/- என லாபகரமான நியாய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய உற்பத்தியாளர் குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு உரம், விதைகள் போன்ற இடுபொருட்கள் வாங்க, உற்பத்தி மானியமாக ஆண்டுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ. 15,000/- வரை வழங்கப்படும்.

நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பு அளிக்கும் விதமாக வீடு, கல்வி, வேலைவாய்ப்பு, உதவித் தொகை போன்றவை கிடைப்பதை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும், மின்கம்பங்களுக்குக் காத்திருக்காமல், அவர்கள் விரும்பினால் நேரடியாக 100% அரசு மானியத்தில் “சூரிய ஒளி பம்ப் செட்டுகள்” வழங்கப்படும்.

விவசாயப் பணியின்போது, விவசாயிகள் இடி, மின்னல் தாக்கியோ, விஷப் பாம்பு கடித்தோ, வனவிலங்குகளால் தாக்கப்பட்டோ உயிரிழந்தால், அவர்களது குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

பாசனத்திற்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள், குறிப்பாக நீர் பாசன ஏரிகள் குடிநீர் ஊரணிகள், கால்வாய்கள் போன்றவை குடிமராமத்து திட்டத்தின் மூலம் சீரமைக்கப்பட்டு, நீர் ஆதாரம் பெருக்கப்படும். குடிமராமத்துப் பணிகள் அந்தந்த பகுதிகளைச் சார்ந்த பாசன விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளின் நலன் கருதி அத்திக்கடவு-அவிநாசி திட்டம் Phase-2 முனைப்போடு செயல்படுத்தப்படும்.

மேட்டூர் அணையின் உபரி நீரை பயன்படுத்தும் விதமாக, சரபங்கா நீரேற்றுத் திட்டத்தின் மூலம் 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். அடுத்தகட்ட நடவடிக்கையாக, சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியில் நீர் நிரப்பும் பணியும்; ஏற்காடு, ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிகளில் ஓடும் வசிஷ்ட நதி மற்றும் கிளை நதிகளோடு இணைத்து அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் அப்பகுதியின் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இப்பணியை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலிலே மீன் பிடிக்கின்றபொழுது விபத்துக்குள்ளாகி மீட்கப்படாமல் இருக்கின்ற மீனவர்களின் குடும்பங்களுக்கும்; மருத்துவ வசதி வழங்கப்படாமல் நோயினால் கடலில் உயிரிழக்கின்ற மீனவர்களின் குடும்பங்களுக்கும், விபத்துக் காப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

வளர்ந்து வரும் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கிட, 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள ஜந்து பாடங்களுடன், கணினி அறிவியலை சேர்த்து ஆறு பாடங்களாக கற்பிக்கும் வகையில் பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஏற்க முடியாத சில ஷரத்துகளைக் குறிப்பிட்டு, அவற்றில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, அறிஞர் அண்ணா கண்ட இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஷரத்துகள் ஏற்புடையதல்ல என்று வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ் நாட்டின் உரிமைகள், அதன் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த வகையான ஷரத்துகளும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற எங்கள் நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடிப்போம்.

கல்வி வளர்ச்சியை கருத்தில்கொண்டு பள்ளிக் கல்வித் துறையில் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

பருவகால மாற்றம் (Climate Change) குறித்து மாணவர்களின் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உரிய காலத்தில் விலையில்லா மடிக் கணினி வழங்கப்படும்.

சுமார் 2000 அம்மா மினி கிளினிக்குகள் நவீன மருத்துவ வசதிகளுடன் மீண்டும் துவக்கப்படும். இவை, நகர்புறம் மற்றும் கிராமப் புறங்களில் மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும்.

10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் செவிலியர்களின் பணி, நிரந்தரம் மற்றும் பணி வரன்முறை செய்யப்படும். மேலும், வேலைப் பளுவை குறைக்கும் வகையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி மொழியாக உள்ள, தமிழ் மொழி உட்பட அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக அறிவித்து, ஆட்சி மொழி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசு போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் தமிழில் நடத்த வலியுறுத்தப்படும்.

பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் திட்டம் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தாலிக்குத் தங்கம் திட்டத்துடன் சேர்த்து விலையில்லா பட்டுவேட்டி-சட்டை, பட்டு சேலைகள் வழங்கப்படும். இதனால் நெசவாளர்களும் பயனடைவார்கள்.

அம்மா ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டதைப் போல், தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தியும், அவ்வப்போது தமிழ் நாட்டிலேயே முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி தொழில் வளம் பெருக்கப்படும். இதன்மூலம் தமிழ் நாடு ‘ஒன் ட்ரில்லியன் டாலர் (One Trillion Dollar Economy) பொருளாதாரமாக’ விரைவில் மாறிட வழிவகை செய்யப்படும்.

காவிரி ஆற்றுப் பகுதிகளில் கழிவு நீர் கலக்காமல் இருக்கவும், மாசில்லாத நீர் கால்வாய் வழியாகச் செல்லவும் ‘நடந்தாய் வாழி காவேரி திட்டம்’ விரைந்து செயல்படுத்தப்படும்.

வீடுகளுக்கு, மேற்கூரை சூரிய மின்சக்தி உற்பத்திக்கு சோலார் பேனல் அமைக்க, 1 கிலோ வாட்டிற்கு ரூ. 30,000/- மற்றும் 2 கிலோ வாட்டிற்கு ரூ. 60,000/- மானியம் வழங்கப்படும்.

நாகப்பட்டினம் தூத்துக்குடி-கன்னியாகுமரி நான்குவழி சாலைத் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும்.

தமிழ் நாட்டிற்கு மத்திய அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை துரிதப்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், தூத்துக்குடி, சென்னை துறைமுக விரிவாக்கத் திட்டங்கள், சென்னையில் இருந்து அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய வெளி நாடுகளுக்கு நேரடி விமானப் போக்குவரத்து. டில்லியில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடி வரையிலான சரக்கு வழித் தடம் (Dedicated Fright Corridar) போன்ற திட்டங்களை விரைவாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு திறன்சார் பயிற்சி வழங்கி, எவ்விதப் பிணையும் இல்லாமல் ரூ. 25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படும்.

தமிழ் நாட்டில் இயங்கும் அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும்.

அரசு அலுவலகங்களில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்பட்டு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி, அவர்களின் வாழ்வு மேம்பட அதிகபட்சம் ரூ. 10 லட்சம் கடன் பெற வழிவகை செய்வதுடன், அதில் 50% மானியம் வழங்கப்படும்.

கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் கடன் தொகையை குறைந்தபட்சம் ரூ. 1,00,000/-த்தில் இருந்து ரூ 2,00,000/-மாக உயர்த்தி, 50% மானியத்துடன் வழங்கிட வழிவகை செய்யப்படும்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தற்போது திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குடிமைப் பணியாளர்கள் கூட்டு மன்றக் கூட்டம் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அவ்வப்போது தீர்வு காணப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக் குழு ஊதிய விகிதத்தை அமல்படுத்தியவுடன், காலதாமதமின்றி 8-வது மாநில ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும்.

தற்போது வழங்கப்படும் சலவைப் படி ரூ. 500-ல் இருந்து ரூ. 1,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ் நாடு முழுவதும் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். மேலும், தெரு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த சிறப்பு கருத்தடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு 297 வாக்குறுதிகளை அதிமுக அறிவித்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share