திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு (தேமுதிக) 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் இன்று மார்ச் 24-ந் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
திமுக கூட்டணியில் அடுத்தடுத்து தொகுதி உடன்பாடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதனையடுத்து இன்று இரவு 7.15 மணியளவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.சுதீஷ் எம்.பி, விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் ஒப்பந்தத்தில் ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் இன்று (24-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாட்டில் 10 (பத்து) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு ஏற்கனவே 1 மாநிலங்களவை இடம் வழங்கப்பட்டுள்ளது. தேமுதிக பொருளாளர் எல்.சுதீஷ், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகி உள்ளார்.
தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் இதுவரை 66 தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இதுவரையிலான தொகுதி பங்கீடு விவரம்:
காங்கிரஸ் 28
தேமுதிக 10
விசிக 8
சிபிஐ 5
சிபிஎம் 5
மதிமுக 4
முஸ்லிம் லீக் 2
மமக 2
கொமதேக 2
