முருகன் மாநாடு… பெரியார், அண்ணா பற்றிய வீடியோவுக்கு அதிமுக கண்டனம்!

Published On:

| By Selvam

மதுரை வண்டியூரில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று (ஜூன் 22) நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பார்த்து ரசித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூன் 23) குற்றம்சாட்டியிருந்தார். aiadmk condemned murugan conference

இந்தநிலையில், முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோவிற்கு அதிமுக ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அதிமுக மீது அவதூறு!

அதிமுக என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும். பெரியாரையே இழிவுபடுத்திய திமுக, அதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை.

அவலமே உருவான ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலினின் திமுக, அதைப்பற்றி நாங்கள் நாள்தோறும் தெரிவிக்கும் மக்களின் குரலான விமர்சனங்ககளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், “Take Diversion” என்ற தனது வழக்கமான பாணியில், முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து, அதிமுக மீது அவதூறான கருத்துகளை அள்ளித் தெளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடலாம் என எண்ணுகிறது.

“திராவிடத்தை அழிக்க முருகா வா” என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத் தான் யாராவது அழித்துவிட முடியுமா? திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி.

மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும்? திமுக-வின் இந்த விஷமப் பிரச்சாரம், நம் திராவிடக் கொள்கையையே Insecure-ஆக காட்டக் கூடிய ஒரு மோசமான Narrative.

முருகன் மாநாட்டு தீர்மானங்கள்!

இதை செய்வதற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும். அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் திமுக-வின் சதிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

பெரியார், அண்ணாவின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன? இல்லை, அப்படி நடக்க தான் அதிமுக விட்டுவிடுமா? திராவிடக் கொள்கை எங்கள் குருதியில் கலந்த ஒன்று.

“ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற அண்ணாவின் நெறிப்படி வாழ்பவர்கள் நாங்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கக் கூடிய இயக்கம் அதிமுக என்பதால் தான், கடவுள் பக்தியை பறைசாற்ற, அமைப்பு ரீதியாக நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக ரீதியாக வாழ்த்து தெரிவித்தார்.

எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்துகொண்டனரே தவிர எந்தவித அரசியல் நோக்கத்திலும் அல்ல.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அதிமுகவைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.

அதே போல், அந்த மாநாட்டில் பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

திமுக பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

அதற்கு அதிமுக சார்பில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக எங்கள் கவனத்திற்கு வரவோ, நாங்கள் யாரும் பார்க்கவோ இல்லை.

மாநாடு முடிந்த பிறகே இதுபற்றிய செய்திகள் வாயிலாக தான் நாங்களும் அறிந்து கொண்டோம். ஜாதியின் பெயரால் மக்கள் பிரிவுண்டு இருக்க, அந்த ஜாதிக்கு மூலமாக கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய, அந்த அரசியலை எதிர்க்கவே “கடவுள் மறுப்பு” கொள்கையை ஆயுதமாக ஏந்தினார் பெரியார். aiadmk condemned murugan conference

பெரியாரின் கோபம் எப்போதும் கடவுள் மீது அல்ல, மாறாக, கடவுளின் பெயரைச் சொல்லி சிலரின் தவறான அரசியலால் ஏற்பட்ட கொடும் ஜாதிய பேதங்கள் மீது தான.

“நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்” என அரசையும் மதத்தையும் தெளிவாக வேறுபடுத்தி, Secularist அரசியலை முன்னெடுத்தவர்.

நாங்கள் பெயரில் மட்டுமல்ல, எங்கள் நெஞ்சங்களிலும் தாங்கும் இதயதெய்வம் அண்ணா. பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைப் பார்வையைத் தன்னகத்தே கொண்டு, வழுவாமல் இயங்கும் அதிமுகவிற்கு, அவதூறும் ஆபாசமும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. aiadmk condemned murugan conference

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share