திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று (ஆகஸ்ட் 24) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருந்த பொதுக் கூட்டத்துக்கு முன்னதாக சாலையில் சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்த அதிமுக தொண்டர்கள், ஓட்டுநரையும் தாக்க முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். தமது பொதுக் கூட்டங்களின் போது, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்தைக் கலைத்துவிட வேண்டும் என்பதற்காகவே அனுப்பி வைக்கப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் திருச்சி துறையூர் ஆத்தூர் சாலையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்காக அதிமுகவினர் காத்திருந்தனர். அப்போது விபத்தில் காயமடைந்த ஒருவரை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து சென்று கொண்டிருந்தது. ஆனால் அதிமுக தொண்டர்களோ, அந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து தாக்க முயற்சித்தனர். அத்துடன் ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் தாக்க முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டது.