அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடு இன்றுடன் (செப்டம்பர் 15) முடிவடைந்தது. இந்த நிலையில் தமது கருத்தை அதிமுக தொண்டர்கள் வரவேற்பதாக செங்கோட்டையன் இன்று தெரிவித்தார்.
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செப்டம்பர் 5-ந் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். இது தொடர்பான முயற்சிகளை முன்னெடுக்க 10 நாட்கள் அவகாசம் தருகிறேன்” என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன்.
செங்கோட்டையன் கட்சி பதவிகள் பறிப்பு
தாம் விதித்த 10 நாட்களுக்குள் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்பது செங்கோட்டையனின் கருத்து. ஆனால் இந்த கெடுவை நிராகரிக்கும் வகையில் செங்கோட்டையனின் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி ஆகியவற்றை பறித்தார் எடப்பாடி பழனிசாமி.
அமித்ஷாவுடன் சந்திப்பு
இதனிடையே டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அதிமுகவின் உட்கட்சி மோதல் குறித்து விவரித்திருந்தார். இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ் அணி ஆதரவு
மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கோபிச்செட்டிபாளையம் சென்று செங்கோட்டையனை தொடர்ந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
10 நாட்கள் கெடு முடிவு
எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடு இன்றுடன் முடிவடைந்தது. எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில், ‘அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்ப்பதை கட்சித் தொண்டர்கள் ஏற்கவில்லை‘ என்பதால் செங்கோட்டையன் விதித்த கெடுவை உடனே நிராகரித்து அவரது கட்சிப் பதவிகளைப் பறித்தார்.
செங்கோட்டையன் கருத்து என்ன?
இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை செங்கோட்டையன் தமது ஆதரவாளர்களுடன் இன்று தனியே கொண்டாடினார். அப்போது தாம் விதித்த கெடு முடிவடைந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என நான் கூறியதே, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றத்தான்.
நான் மனம் திறந்து பேசிய கருத்தை அதிமுக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். இது புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்திருக்கும். மறப்போம் மன்னிப்போம் என்று கூறியவர் பேரறிஞர் அண்ணா. அதிமுக தொண்டர்களின் எண்ணத்தையே நான் பிரதிபலித்தேன் என்றார்.
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி
இந்த பின்னணியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல இருக்கிறார்; டெல்லியில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.