தனது பணியாளர்களில் சுமார் 12000 பேரை நீக்கும் நடவடிக்கையில் பிரபல டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் இறங்கியுள்ளது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி நிறுவன பணி வாய்ப்பு என்பது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது.
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் படிப்படியாக 12,200 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல நாடுகளில் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களிடையே பெரும் அதிர்ச்சியை உள்ளாக்கி உள்ளது. இந்த நடவடிக்கை ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருதிவாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
அவர், ”பணி நீக்கம் செய்யப்படுபவர்கள் அனைவரும் இடை நிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றும் ஊழியர்கள் தான். இது டிசிஎஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த பணியாளர்களில் வெறும் 2 சதவிகிதம் மட்டும்தான். செயற்கை தொழில் நுட்பம் மற்றும் அதன் தாக்கத்தால் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த தொழில் நுட்பத்தை பெரிய அளவில் நாங்கள் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இது ஒரு எளிதான முடிவு அல்ல, தலைமை நிர்வாக அதிகாரியாக நான் எடுக்க வேண்டிய கடினமான முடிவுகளில் ஒன்று” என அவர் தெரிவித்துள்ளார்.