நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘துரோகி’ என அழைத்தது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
மக்களவையில் ராகுல் காந்தியை பேசவிடாமல் பாஜக எம்.பிக்கள் தடுத்தனர். இதனைக் கண்டித்து காங்கிரஸ்,இடதுசாரி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இந்தியா கூட்டணியின் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிப்ரவரி 4-ந் தேதி இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
அப்போது மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு நாடாளுமன்றத்துக்குள் செல்ல வருகை தந்தார். அவரைக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, இதோ ‘நமது துரோகி’ வருகிறார்.. எங்களிடம் தான் மீண்டும் வருவீர்கள் என சிரித்தபடியே கூறிவிட்டு கை குலுக்க அவரை நெருங்கினார்.
ஆனால் மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு , “நீங்கள் இந்தியாவின் துரோகி” என சிரித்தபடியே பதிலடி தந்துவிட்டு ராகுல் காந்தியுடன் கை குலுக்க மறுத்துவிட்டு சென்றார்.
ராகுல் காந்திக்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம்
காங்கிரஸ் கட்சியில் இருந்த ரவ்நீத் சிங் பிட்டு, 2024-ல் பாஜகவுக்கு தாவினார். இதனால் அவரை துரோகி என ராகுல் காந்தி விமர்சித்தார். ஆனால், சீக்கியர் சமூகத்தை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக டெல்லியில் சீக்கியர்கள் போராட்டமும் நடத்தினர்.
