சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் நேற்று (பிப்ரவரி 21) நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானை எளிதாக வென்றது. afghan lost to south africa
தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் சரமாரியாக வீசிய ‘ஷார்ட் பால்’ என்னும் ஏவுகணைகளைச் சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் மட்டையாளர்கள் வீழ்ந்தார்கள்.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரரான டோனி டி ஜோர்ஷி 11 (11) விரைவிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நான்கு மட்டையாளர்களும் அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தார்கள். இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ரியான் ரிகில்டன் 103 (106) சதம் அடித்து அசத்தினார். இதுவே அவருடைய முதல் சதம்.

கேப்டன் டெம்பா பவுமா 58 (76), வன் டீர் துஷன் 52 (46), எய்டன் மார்க்கரம் 52 (36) ஆகியோரின் ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களைக் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு எடுபடவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கானால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 10 ஓவர்களில் 59 ரன்களைக் கொடுத்த அவர், ஒரு விக்கெட்டைக்கூட எடுக்கவில்லை. முகமது நபி 51 ரன் கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.
316 என்னும் இலக்கை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் எந்தக் கட்டத்திலும் இலக்கை அடையக்கூடிய வகையில் ஆடவில்லை. இடைநிலை மட்டையாளர் ரஹ்மத் ஷா 90 (92) மட்டுமே சிறப்பாக விளையாடினார். மற்ற யாரும் 20 ரன்கூட அடிக்கவில்லை. இறுதியில், 43.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 208 ரன்களைச் சேர்த்த ஆப்கானிஸ்தான் அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

தென்னாப்பிரிக்க அணியில், காகிசோ ரபாடா 36 ரன் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். நெகிடி, முல்டர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை எடுத்தார்கள்.
தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாள்ர்கள் ஷார்ட் பிச் பந்துகளை வீசி ஆப்கன் மட்டையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். பவுன்சராகி வந்த பந்துகளைச் சமாளிக்க முடியாமல் ஆப்கன் அணியினர் திணறினார்கள்.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. நாளை (பிப்ரவரி 23) பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறவிருக்கிறது.