ஈரோடு அதிமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல், கட்சியின் 13 கவுன்சிலர்கள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 5ஆம் தேதி கட்சி தலைமைக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர், ஒன்றுபட்ட அதிமுகவிற்கான வேலைகளை அடுத்த 10 நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் அதிருப்தியாளர்கள் உடன் தாமே முன்னின்று வேலைகளை தொடங்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை பறித்து, அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமித்து உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செப்டம்பர் 20ஆம் தேதி புதிதாக நியமிக்கப்பட்ட ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் மொடச்சூர் பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. இதில் நிர்வாகிகள், கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் என செல்வராஜ் உத்தரவிட்டிருந்தார்.
அதே நேரத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்திருந்தார் செங்கோட்டையன்.
அதன்படி செல்வராஜ் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு செல்லாமல், செங்கோட்டையனின் அழைப்பினை ஏற்று, அவர் நடத்திய கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 14 அதிமுக கவுன்சிலர்களில் 13 பேர் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனையறிந்த மாவட்ட செயலாளர் செல்வராஜ், இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ’செங்கோட்டையன் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்’ என புகார் தெரிவித்துள்ளார் என்கிறார்கள் ஈரோடு அதிமுக நிர்வாகிகள்.
இதனால் டென்சன் ஆன எடப்பாடி, “சரி பார்த்துக்கலாம், நீங்கள் பூத் கமிட்டி மற்று சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.