வைஃபை ஆன் செய்ததும் சட்டமன்ற காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன
“சட்டமன்றத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்… சட்டமன்ற வளாகத்தில் கட்சி பேதம் இல்லாமல் உறுப்பினர்கள் தங்களுக்கு இடையே விவாதித்துக் கொள்ளும் விஷயங்கள், சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்களை விட பரபரப்பான செய்திகளை உள்ளடக்கியவையாக இருக்கின்றன. DMK JAYAKUMAR TO GOING TO DMK?
உதாரணத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு சட்டமன்ற வளாகத்தில் சென்னையைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், வெளி மாவட்ட அதிமுக உறுப்பினர்களோடு பேசிக் கொண்ட ஒரு விஷயம்… அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எப்போது திமுகவுக்கு வருவார் என்பதை பற்றி தான்.
மார்ச் 25ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதையடுத்து அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் உருவாகலாம் என்கிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.
தினந்தோறும் அதிமுக சார்பில் பரபரப்பான பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜெயக்குமார் மார்ச் 25ஆம் தேதி முதல் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில் முற்றிலும் தவிர்த்து வருகிறார். செய்தியாளர் சந்திப்புகளை நடத்த தயக்கம் காட்டுகிறார். சென்னையில் கட்சிக்காரர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளில் தொடர்ந்து கலந்துகொண்டு கட்சிக்காரர்களுடனே இருக்கும் ஜெயக்குமார், பத்திரிகையாளர்களை மட்டும் சற்று தள்ளியே வைத்திருக்கிறார்.
ஏற்கனவே கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோற்றுப் போனேன் என தேர்தல் முடிவுக்குப் பின் ஜெயக்குமார் வெளிப்படையாகவே பேசியிருந்தார். அதற்குப் பிறகு 2023 இல் பாஜகவோடு அதிமுக கூட்டணி இல்லை என்பதை ஜெயக்குமார் மூலமாகதான் அறிவிக்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி.

இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் பாஜகவோடு கூட்டணி வைப்பதற்கு அச்சாரமாக அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்வது பற்றி தன்னிடம் விவாதிக்கவில்லை என்பதுதான் ஜெயக்குமாரின் வருத்தம்.
மேலும் அதிமுக -பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில் இனி மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டியிட முடியாது என்பதும் அவருடைய புழுக்கமாக இருக்கிறது.
இதை அறிந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் சில திமுக புள்ளிகளை அழைத்துப் பேசியிருக்கிறார். அதன் அடிப்படையில், ‘நமக்கு தலைநகரத்தில் மீனவ சமுதாய முக்கிய புள்ளிகள் பெரிய அளவில் இல்லை. அதனால எடப்பாடி மேல ஜெயக்குமார் வருத்தத்தில் இருந்தார்னா அவரை இங்கே அழைச்சிட்டு வந்துடலாம்’ என்று வேலையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள் திமுக புள்ளிகள்.
திமுக தரப்பில் இருந்து சிலர் ஜெயக்குமாரிடம் தொடர்பு கொண்டு மெல்ல மெல்ல பேச ஆரம்பித்திருக்கிறார்கள். DMK JAYAKUMAR TO GOING TO DMK?
இந்த விஷயம் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் தெரிய வந்திருக்கிறது. அவர் பழைய பாசத்தில்,ஜெயக்குமார் திமுகவுக்குள் வருவதை ரசிக்கவில்லை என்கிறார்கள் வடசென்னை திமுகவினர்.
இந்த நிலையில் தன்னிடம் பேசிய திமுகவினரிடம் எந்த உத்தரவாதத்தையும் உறுதியையும் ஜெயக்குமார் வழங்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.
ஜெயக்குமார் வட்டாரத்தில் இது பற்றி கேட்டபோது, ‘எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததில் ஜெயக்குமாருக்கு பெரிய வருத்தம் தான். அதேநேரம் இது பற்றி தன்னிடம் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். டெல்லியில் இருந்து திரும்பியதும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுவார் என்றும் ஜெயக்குமார் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

கூட்டணி முறிவையே தன்னை விட்டு அறிவிக்க சொல்லிவிட்டு மீண்டும் கூட்டணி வைக்கும் விசயத்தை ஏன் தன்னிடம் விவாதிக்கவில்லை என்பது அவருக்குள்ள வருத்தம். ஏனென்றால் எந்தெந்த செய்திகளை ஊடகங்களுக்கு சொல்ல வேண்டும் என்பதை, தினமும் ஜெயக்குமாரும் எடப்பாடியும் காலை நேரத்தில் போனில் உரையாடிக் கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட நிலையில் தனக்குத் தெரியாமலே டெல்லி பயணம் மேற்கொண்டது தான் ஜெயக்குமாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் அவர் இப்போது வரை மௌனமாக இருக்கிறார்.
ஜெயக்குமாரின் இந்த மௌனத்தையும் அவருக்கு திமுக தரப்பிலிருந்து தூது விடப்படுவதையும் அறிந்து எடப்பாடி பழனிசாமி சில ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறார்.
அதாவது வருகிற ஜூலை மாதம் அதிமுகவுக்கு இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. தொடர்ந்து ஜெயக்குமார் வெற்றி பெற்று வந்த ராயபுரம் சட்டமன்ற தொகுதி இப்போது திமுக வசம் இருக்கிறது. பாஜக கூட்டணியோடு மீண்டும் அங்கே போட்டியிடுவதையும் ஜெயக்குமார் விரும்ப மாட்டார். DMK JAYAKUMAR TO GOING TO DMK?
எனவே மீண்டும் ராயபுரத்தில் போட்டியிடுவதை விட ராஜ்யசபாவுக்கு அவரை அனுப்பி வைத்தால் என்ன என்ற ஒரு ஆலோசனையும் எடப்பாடி வட்டாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். அதேநேரம் திமுகவின் முயற்சியும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ராயபுரமா, ராஜ்யசபாவா, அறிவாலயமா என்பது ஜெயக்குமாரின் கையில்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.