கரூரில் நடந்த பெருந்துயரம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனாவுக்கும், சிடிஆர் நிர்மல் குமாருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கு நிர்வாக ரீதியாக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தவெக தரப்பு கூறியது. ஆனால், வீடியோ வெளியிட்டு இந்த குற்றச்சாட்டுகளுக்கு அரசு தரப்பு விளக்கமளித்தது.
முதலவ்ர் தொடங்கி அரசு செயலாளர்கள், டிஜிபி, ஏடிஜிபி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என பலரும் கரூர் பெருந்துயரம் தொடர்பாக பேசியுள்ளனர்.
யார் மீது தவறு என சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் கருத்துகள் அனல் பறக்கின்றன.
இந்தநிலையில் தலைமறைவாக உள்ள தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தவெக பரப்புரை தொடர்பான ட்ரோன் காட்சிகள், விஜய் தனி கேமராமேன் எடுத்த காட்சிகள், பிரச்சார பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை விசாரணைக்காக ஒப்படைக்குமாறு போலீசார் கேட்டுள்ளனர்.
சேலையூரில் உள்ள சிடிஆர் நிர்மல்குமாரின் இல்லத்திற்கு சென்ற போலீசார், அவரது உதவியாளரிடம் நோட்டீஸை வழங்கிச் சென்றதாக தகவல்கள் வருகின்றன.