ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவுள்ளது.
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெகவினரும், அக்கட்சித் தலைவர் விஜய்யும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டனர். இந்தநிலையில், இலங்கை நேபாளம் நாடுகளைப் போல ஜென் இசட் புரட்சி ஏற்படும் என்று தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளார் ஆஜவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாக கூறி சென்னை சைபர் கிரைம் போலீசார் ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
‘உள்நோக்கத்துடன் கருத்து பதிவிடவில்லை, உடனே அது நீக்கப்பட்டுவிட்டது என்று ஆதவ் அர்ஜூனா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம்.
இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி, புகார்தாரரான எல்.ஐ.சி. ஏஜெண்ட் சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தனது தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சண்முகம் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுக்க, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று (மார்ச் 18) விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இம்மனு விசாரணைக்கு உகந்தது தான் எனக் கூறி, மனுவை எண்ணிட்டு, பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
