ADVERTISEMENT

ஆதவ் அர்ஜூனாவின் சர்ச்சை போஸ்ட் : வழக்கு ரத்து!

Published On:

| By Kavi

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ADVERTISEMENT

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக மீதும், அக்கட்சித் தலைவர் விஜய்யும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டனர். இந்தநிலையில், இலங்கை நேபாளம் நாடுகளைப் போல ஜென் இசட் புரட்சி ஏற்படும் என்று தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளார் ஆஜவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

அந்த பதிவுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அதை எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

இந்தநிலையில் அவரது பதிவு கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாக கூறி சென்னை சைபர் கிரைம் போலீசார் ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை குற்றவியல் வழக்குகளை விசாரிக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது

ADVERTISEMENT

அதன்படி, வழக்கு விசாரணைக்கு வந்த போது அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘கிளர்ச்சியைத் தூண்டுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும், எனவே அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதம் முன் வைத்தார்.

அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதாடினார். அவர், “ இந்த வாதத்தை ஏற்க கூடாது. அவரது எக்ஸ் தள பதிவை கருத்தில் கொள்ள வேண்டும். செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பை தொடர்ந்து அவர் ஆளே காணமல் போய்விட்டார். பின்னர் 29ஆம் தேதி நள்ளிரவில் தனது எக்ஸ் பதிவில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்” என்று கூறி ஆதவ் அர்ஜுனாவின் எக்ஸ் பதிவை வாசித்து காட்டினார்.

மேலும் அவர், “செப்டம்பர் 27ஆம் தேதி இரவு ஒட்டுமொத்த மாநிலமும் சோகத்தில் மூழ்கியிருந்தது. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் கவலைத் தெரிவித்தனர். ஆனால் இந்த மனுதாரர் தான் பொறுப்பேற்ற கூட்ட நெரிசலுக்குப் பிறகு தலைமறைவாகி இந்த ட்வீட்டைப் பதிவேற்றினார். அவர் இந்த ட்விட்டை டெலிட் செய்ததன் மூலம் வழக்குத் தொடர வேண்டிய அவசியத்திலிருந்து அவரை விடுவிக்கமுடியாது” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா அவ்வாறு பதிவிட்டதை ஒப்புக்கொள்கிறாரா என்று நீதிபதி கேட்டபோது, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “செப்டம்பர் 29ஆம் தேதி இரவு 11:28 மணிக்கு அந்த ட்வீட்டைப் பதிவிட்டதாகவும், ஆனால் சில நிமிடங்களில் நேபாளம் மற்றும் இலங்கை பற்றிய குறிப்புகளை நீக்கி அதைத் திருத்தி, பின்னர் செப்டம்பர் 30 அன்று நள்ளிரவு 12:02 மணிக்கு முழு ட்வீட்டையும் நீக்கிவிட்டதாகவும்” தெரிவித்தார். எனவே அந்த ட்வீட் வெறும் 30நிமிடங்கள் மட்டுமே இணையத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

எனினும் 30 நிமிடங்களுக்குள் 102,000 பார்வைகளை அந்த ட்வீட் பெற்றதாக கூறிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “நீக்குதல் அவரை குற்றத்திலிருந்து விடுவிக்காது” என்றார்.

அதோடு, நடிகர் எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் வேறொருவர் எழுதிய அவதூறான பதிவைப் பகிர்ந்ததற்காக அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய மறுத்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் 2023ஆம் ஆண்டு தீர்ப்பைப் படித்துக் காட்டினார் என்.ஆர்.இளங்கோ.

“மனுதாரரின் ட்வீட்டை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் என்பது உண்மை. இந்த எஃப்.ஐ.ஆர் செப்டம்பர் 30 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதால் மட்டுமே, அனைத்தும் தடுக்கப்பட்டன. இல்லையெனில், விளைவுகளை நிறுத்தியிருக்க முடியாது. மனுதாரருக்கு எதிராக உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததால் விளைவுகள் நிறுத்தப்பட்டன. எனவே இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையை அனுமதிக்க வேண்டும்” என்றும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டுக்கொண்டார்.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘மனுதாரர் பதிவிட்ட கருத்து வெறுப்பு பேச்சு என்ற வரம்புக்குள் வராது. கோபத்தின் வெளிப்பாடு தான் அந்த பதிவு. 18 மணி நேரம் கழித்தே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடபடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தசூழலில் இன்று (நவம்பர் 21) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தீர்ப்பு வழங்கினார்.

உள்நோக்கத்துடன் கருத்து பதிவிடவில்லை, உடனே அது நீக்கப்பட்டுவிட்டது என்று ஆதவ் அர்ஜூனா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று அவர் மீதான வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share