கோடை காலத்தில் ஊட்டி கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களை அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Additional vehicles allowed on Ooty-Kodaikanal
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அதன்படி, வார நாட்களில் ஊட்டியில் 6000 வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு இன்று (ஏப்ரல் 25) மீண்டும் நீதிபதிகள் என் சதீஷ்குமார் மற்றும் டி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஊட்டிக்கு வார நாட்களில் 7000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 9000 வாகனங்களும் வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்த நீலகிரி கூடுதல் ஆட்சியர், கோடை காலத்தில் ஊட்டியில் மலர், பழம், ரோஜா கண்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகள் நடத்தப்படும். எனவே கோடை காலத்தில் கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார்.
இந்த வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கோடை கால விழாக்களின் போது கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவசியம் ஏற்படும் பட்சத்தில் கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இதே போல கொடைக்கானலுக்கு கூடுதலாக 300 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். Additional vehicles allowed on Ooty-Kodaikanal