ஸ்ரீபிரியாவிடம் நடிக்க வாய்ப்புக் கேட்ட சிவாஜி !

Published On:

| By Minnambalam Desk

Sri priya

நடிகை ஸ்ரீப்ரியா தயாரித்த படம் நீயா.. ‘நாகின்’ என்ற இந்திப் படத்தில் வந்த ஒரு பாடல்தான் அவரை படத்தயாரிப்பாளர் ஆக்கியது. வைஜயந்திமாலா இந்திப் படங்களில் கொடிகட்டிப் பறந்தபோது ‘நாகின்’என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடி பிரதீப்குமார். மகுடி வாத்தியத்தை அற்புதமான மெட்டுகளில் பாடல்கள் இருந்தன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு’நாகின்” என்ற பெயரிலேயே இன்னொரு இந்திப் படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. சென்னை ஸ்டார் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த இந்தப் படத்தை, தன் தாயார் கிரிஜாவுடன் சென்று பார்த்தார், ஸ்ரீபிரியா.

படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அவரை ரொம்பவும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்தார். அதோடு நில்லாமல், தனது தாயாரிடம் “நான் நடிக்கிற படத்தில் இப்படியொரு பாட்டு இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

“அவ்வளவுதானே! கவலையை விடு” என்று கிரிஜா சொன்னார். அம்மா அப்படிச் சொன்னதன் பொருள் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு வாரம் கழித்தே புரிய ஆரம்பித்தது.

ADVERTISEMENT

‘நாகின்’படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை கிரிஜா வாங்கினார். டைரக்டர் துரை இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

முதன்மைக் கேரக்டரில் முதலில் ரஜினி நடிக்க இருந்தார். ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ரஜினிக்கு பதிலாக கமல் நடித்தார். அவரோடு விஜயகுமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என மொத்தம் அன்றைய 6 ஹீரோக்கள் நடித்தனர்.

ADVERTISEMENT

இந்திப் படத்தில் ரீனா ராய் நடித்த “பாம்பு” கேரக்டரில் ஸ்ரீபிரியாவும், அவருக்கு ஜோடிப் பாம்பாக சந்திர மோகனும் நடித்தார்கள். இந்திப் படத்தில் ஸ்ரீபிரியா எந்தப் பாட்டுக்கு மயங்கினாரோ, அதே டியூனில் ” ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா” என்ற அந்தப் பாடல். இந்தப் படத்தில், அமைந்தது. தமிழிலும் 1979 பொங்கலுக்கு வெளிவந்த “நீயா” பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படம் வெளியானபோது, சிவாஜிகணேசனுடன் “திரிசூலம்” படத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தார்.

”நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பில் இமயம். அவர் “நீயா” படம் பார்த்து விட்டு மறுநாள் “திரிசூலம்” படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் பேசினார். “படம் பார்த்தேன் புள்ளே! பாம்பா உன் கூட சேர்ந்து நடனமாடும் அந்தப் பையன் (சந்திர மோகன்) என்னமா டான்ஸ் ஆடறான்! அவன் `கெட்அப்’பும், கொண்டை போட்டிருந்த அழகும் அடடா! அடடா! இந்த கேரக்டருக்கு என்னை ஏன் புள்ளே கூப்பிடலை?” என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆனந்தம் ஒருபுறம்” என்று இன்றும் வியக்கிறார் .

நடிப்பின் காதலன் அப்படித்தானே இருப்பார்?

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share