கோவையில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகை ஆண்ட்ரியா தங்கம் விலையை பார்த்தாலே பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் 17ம் தேதி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சவரன் தங்கம் ரூ,97,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (நவம்பர் 15) ஒரு சவரன் தங்கம் ரூ.92,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.1,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 15) கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வெள்ளி நகை விற்பனை மையகத்தின் துவக்க விழா நடைபெற்றது. பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா நகை கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நகைகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எனக்கு மிகவும் பிடித்த ஊர் கோயம்புத்தூர். ஆண்டுக்கு பத்து முறை கோவைக்கு வந்து செல்கிறேன். கோயம்புத்தூர் வந்தாலே எனக்கு மிகுந்த சந்தோஷம். நகைகளை பார்த்தாலே ஒரு வீக்னஸ் இருக்கு.. தற்போது தங்கம் விலையைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்றார்.
அப்போது ஆண்ட்ரியாவின் படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, வரும் நவம்பர் 21ஆம் தேதி நான் நடித்த மாஸ்க் திரைப்படம் வெளியாக உள்ளது. படம் நன்றாக வந்துள்ளது. ஜாலியான படம் என்பதால் அனைவரும் திரையரங்கில் வந்து படத்தை பாருங்கள் என வலியுறுத்தினார்.
தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகர் விஜய் வந்தாலும் மகிழ்ச்சி தான்.. அவர் தளபதி தானே என்றார்.
நடிகை கௌரி கிஷன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “அப்படியா.. எனக்கு தெரியாதுங்க.. நான் கேள்வி பட்டதில்லை. என் படம் வேலைகளாக நான் பிசியாக இருந்தேன். எனக்கு இந்த விஷயம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.. அதுபற்றி என்னால் பேச முடியாது என கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
