நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இன்றைய சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் ‘கூட்டணி’ தொடர்பாக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக வெளியாகி இருக்கும் தகவல் அனைத்து அரசியல் கட்சிகளையும் உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.
தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்துக்குப் பிறகு, தவெகவின் செயல்பாடுகள் சுமார் 1 மாதம் முடங்கி இருந்தன. இதனையடுத்து கடந்த சில நாட்களாக தொண்டர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணியின் ஆலோசனைக் கூட்டங்கள், மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமனம் என தவெக பரபரப்பாக இயங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 3,000 பேருக்கு தவெகவில் பதவிகள் வழங்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த பின்னணியில் தவெகவின் அடுத்த கட்ட நகர்வுகள், தேர்தல் பிரசார பயணங்கள், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தவெக மறுசீரமைப்பு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தவெகவின் இன்றைய பொதுக் கூட்டத்தில் பாஜக- அதிமுக கூட்டணியில் இணையும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது; பாஜக- அதிமுக கூட்டணியில் தவெகவுக்கு தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டுவிட்டதால் இன்றைய பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேறுகிறது” என்று ஒரு தரப்பில் காட்டுத் தீ போல செய்திகள் பரவிக் கொண்டிருக்க பல்வேறு கட்சித் தலைவர்களும் தவெக தரப்பை தொடர்பு கொண்டு, “கூட்டணி குறித்து முடிவு எடுத்துவிட்டீர்களாமே? இன்றைக்கு என்ன தீர்மானம் வரப் போகிறது?” என்றெல்லாம் கேட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக நாம் தவெக வட்டாரங்களில் விசாரித்த போது, “ஆம் கூட்டணி பற்றிய தீர்மானம் இன்றைய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கிறது. வழக்கம் போல தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை கண்டித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய பிரச்சனைகள் பலவற்றையும் சுட்டிக்காட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
கூட்டணியைப் பொறுத்தவரை, விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை; விஜய் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்பதில் தவெக உறுதியாக இருக்கிறது. அதனால், கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கக் கூடிய வகையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்கின்றன.
