நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று (செப்டம்பர் 20) பிரசாரம் மேற்கொள்கிறார். நாகையில் விஜய் பிரசாரம் செய்யும் இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்தடை அமல்படுத்தப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக நடிகர் விஜய் வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் பிரசாரம் செய்தார். தவெக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டதால் விஜய்யின் வாகனம் ஊர்ந்துதான் சென்றது. இதனால் விஜய்யால் பெரம்பலூரில் பிரசாரம் செய்ய முடியாமல் போனது
இதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 20) நாகப்பட்டினம், திருவாரூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்துக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து 5 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும்; பட்டாசுகள் வெடிக்க கூடாது; பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் பொறுப்பு ஏற்க வேண்டும்; சிலைகளின் மீது ஏறக் கூடாது என்பது உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இந்த பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாகையில் பகல் 12.25 மணி முதல் 1 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. நாகையில் விஜய் பிரசாரம் செய்யும் இடங்களில் அக்கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று பாதுகாப்பு கருதி மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை பிரசாரத்தை நிறைவு செய்த பின்னர், திருவாரூர் செல்லும் விஜய் அங்கு தெற்கு வீதியில் பிரசாரம் செய்கிறார். திருவாரூரில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.