சித்தார்த், சரத்குமார் நடிப்பில் அண்மையில் வெளியான 3 B H K படம் நல்ல பெயர் வாங்கியது. அதற்கு முன்பு வந்த டெஸ்ட் என்று நெட்பிளிக்ஸ் தொடர் ரொம்ப எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்டுப் போனது.. அதற்கு முன்பு வந்த மிஸ் யூ படமும் மிஸ் ஆக, அதற்கும் முன்பு வந்த இந்தியன் 2 படமும்…. ம்ஹும்!
ஆனால் அதற்கும் முன்பு வந்த சித்தா படம் பெரும்பாரட்டுகளைப் பெற்றதோடு வசூலிலும் பட்டையைக் கிளப்பியது. சித்தாவுக்குப் பிறகுதான் மிஸ் யூ வையும் இந்தியன் 2 – ஐயும் கொடுத்தார் சித்தார்த். சித்தா இயக்குனர் அருண்குமார் வீர தீர சூரன் என்று ஒரு ரொம்ப சுமார் படத்தைக் கொடுத்தார். (சித்தா படத்துக்குப் பிறகு இருவர் மேலும் கண் பட்டிருக்கும்)
இந்த நிலையில் அடுத்து சித்தார்த் நடிக்கும் படம், ரெளடி & கோ. கதாநாயகி ராஷி கண்ணா,
”உணவு டெலிவரி சர்வீஸ் போல மக்களின் பிரச்சினைகளை கையாளும் கார்ப்பரேட் ரெளடி உலகம் என்ற கதையில் உருவாகும் நகைசுசுவைப் படம் இது. சென்னையில் படமாக்கப்பட்ட இந்தக் கதை சிக்கலான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை என இரண்டிற்கும் உத்திரவாதம் அளிக்கிறது.
ரெளடிகளின் கார்ப்பரேட் சாம்ராஜ்யம் பற்றிய கதை என்பதால் ‘ரெளடி & கோ’ என்பதை தலைப்பாக தேர்வு செய்தோம். முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த எண்டர்டெயினராக கதை இருக்கும். ” என்கிறார் படத்தின் இயக்குனர் கார்த்திக் கிரிஷ்.
சித்தாவுக்கும் முன்பு இதே கார்த்திக் கிரிஷ் இயக்க சித்தார்த் நடிப்பில் வந்த’ டக்கர் ‘ தோல்விப் படம். அந்தப் படத்துக்கு அப்புறம்தான் சித்தா கொடுத்தார் சித்தார்த்.
எனவே இந்தப் படம் எப்படி இருந்தாலும் கார்த்திக் கிரிஷுக்கு சித்தார்த் ஒரு படம் நடித்ததால் அதற்கு அடுத்து சித்தார்த் நடிக்கும் படம் ஓஹோ என்று ஓடும் என்பது சித்தார்த்துக்கு செண்டிமெண்ட் ஆக இருக்குமோ? தொடர்ந்து பேசுவோம்.
- ராஜ திருமகன்
