அரிய மூளை மற்றும் நரம்பு நோய்களுடன் தான் போராடி வருவதாக நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. actor salman khan battling with rare brain disease
60 வயதை நெருங்கிய நடிகர் சல்மான் கான் இன்றும் பாலிவுட் உச்சநட்சத்திரமாக விளங்கி வருகிறார். அவரது திரைப்படங்களுக்கு இன்று கோடிக்கணக்கில் வசூலை குவித்து வருகின்றன.
மேலும் சோமி அலி, ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப் என பலரையும் அவர் காதலித்ததாக கூறப்பட்டாலும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாத பேச்சுலராகவே வலம் வருகிறார்.
இந்த நிலையில் சல்மான் கான் தி கிரேட் இந்தியன் கபில் ஷோ நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சல்மான் கான், “நான் திருமணம் செய்து கொள்வதால் யாருக்கு என்ன லாபம்? ஒரு சிறிய தவறான புரிதல் கூட விவாகரத்துக்கு வழிவகுக்கும். நான் இத்தனை ஆண்டுகளாக உழைத்து சேர்த்து சொத்துக்களை விவாகரத்தின் மூலமாக ஒரு பெண்ணுக்கு தர விரும்பவில்லை” என்று சிரித்தபடியே கூறினார்.
அதன்பின்னர் கொஞ்சம் சீரியசாக வயதாகும் தனக்கு உடலில் பல நோய்கள் இருப்பதாக குறிப்பிட்டார். ’பிரைன் அனீரிசம் (brain aneurysm), ட்ரைஜெமினல் நியூராலஜியா (trigeminal neuralgia) மற்றும் ஆர்டெரியோவெனஸ் மால்ஃபார்மேசன்ஸ் (Arteriovenous Malformations) என நாள்பட்ட நோய் தனக்கு இருக்கிறது என்றும், இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு முகத்தில் அடிக்கடி ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்படும் என்றும், அதனுடன் தான் தினமும் போராடி வருவதாக தெரிவித்தார்.
முதன்முறையாக தனது நோய் குறித்து மனம் திறந்த சல்மான் கானின் இந்த பேச்சு, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் சல்மான்கானை பாதித்துள்ள இந்த நோய் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து இங்கே காணலாம்.

மூளை அனீரிசம் :
மூளை அனீரிஸம் என்பது மூளையில் உள்ள இரத்த நாளத்தின் பலவீனமான இடத்தில் வீக்கம் ஏற்படுவதாகும். காலப்போக்கில் இந்த வீக்கம் வளர்ந்து, ஒருவேளை வெடித்தால், மூளையில் இரத்தப்போக்கு ஏற்படலாம். இது பக்கவாதத்தை ஏற்படுத்தலாம்.
மூளை அனீரிஸம்கள் பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், புகைபிடித்தல் மற்றும் சில மரபணு நிலைமைகளுடன் தொடர்புடையது என மருத்துவ உலகம் கூறுகிறது.
சில நேரங்களில், அவை எந்த அறிகுறிகளையும் காட்டாது மற்றும் ஸ்கேன்களின் போது மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் அவை உடைந்தால், அவை கடுமையான தலைவலி, மங்கலான பார்வை அல்லது மயக்கத்தை கூட ஏற்படுத்தும்.

தமனி சிரை குறைபாடு
தமனி சிரை குறைபாடு என்பது மூளையில் உள்ள அசாதாரண இரத்த நாளங்களின் அரிய சிக்கலாகும். பொதுவாக, தமனிகளில் இருந்து நரம்புகளுக்கு இரத்தம் சீராகப் பாய்கிறது. ஆனால் AVM-ல், இரத்தம் தமனிகளிலிருந்து நரம்புகளுக்கு நேரடியாக விரைகிறது, இடையில் உள்ள சிறிய நுண்குழாய்களைத் தவிர்த்துவிடும். இது சாதாரண சுழற்சியை சீர்குலைத்து நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த குறைபாடு பொதுவாக பிறப்பிலிருந்தே இருக்கும். பல ஆண்டுகளாக அறிகுறிகளைக் காட்டாமல் இருக்கலாம். ஆனால் அவை வெளிபடும்போது, அவை தலைவலி, காதுகளில் சத்தம், வலிப்பு, பலவீனம் அல்லது பேச்சு பிரச்சனைகளை ஏற்படுத்தும். கடுமையான சந்தர்ப்பங்களில், அவை பக்கவாதம் அல்லது மூளை இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

ட்ரைஜீமினல் நியூரால்ஜியா
இது பெரும்பாலும் “தற்கொலை நோய்” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது அவ்வளவு வேதனையாக இருக்கும்.
ட்ரைஜீமினல் நியூரால்ஜியா முகத்தில் கூர்மையான, மின்சார அதிர்ச்சி போன்ற வலியை ஏற்படுத்துகிறது. சாப்பிடும்போது, பல் துலக்கும்போதோ அல்லது சிரிக்கும்போதோ அவை தூண்டப்பட்டு திடீரென வலியை கொடுக்கும்.
முக உணர்வைக் கட்டுப்படுத்தும் ட்ரைஜீமினல் நரம்பில் இரத்த நாளம் அழுத்தம் கொடுக்கும்போது இது நிகழ்கிறது. இது ஒரு நாள்பட்ட கோளாறு மற்றும் வலியை கட்டுபடுத்துவது கடினம், பெரும்பாலும் மருந்து அல்லது அறுவை சிகிச்சை கூட தேவைப்படுகிறது.
நடிகர் சல்மான் கான் ஏற்கெனவே தனக்குள்ள ட்ரைஜீமினல் நியூரால்ஜியாவுடன் போராடுவது பற்றி கான் பேசியிருந்தார். அதற்காக 2011 இல் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். இந்த நிலையில் தான் இப்போது மேலும் இரண்டு நரம்பியல் பிரச்சினைகளை கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஏன் இந்த நோய்கள் ஏற்படுகின்றன?
இதுதொடர்பாக இந்தியா டூடே இணையதளத்திற்கு ரூபி ஹால் கிளினிக்கின் ஆலோசகர் மருத்துவர் டாக்டர் சாம்ராட் ஷா அளித்த பேட்டியில், ”நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது காலப்போக்கில் இரத்த நாளங்களை சேதப்படுத்தும் மற்றும் இதய நோய் அல்லது மூளை அனீரிஸம் போன்ற கடுமையான நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இதற்கு நீண்ட நேரம் வேலை செய்வது, ஓய்வைத் தவிர்ப்பது, மோசமான தூக்கம், மன அழுத்தம் ஒழுங்கற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளை புறக்கணிப்பது போன்றவை முக்கிய காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நோய்களில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?
மேலும் அவர் இந்த நோய்களில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் ஷா கூறியுள்ளார்.
அதன்படி, ஒருவர் தினமும் 7–8 மணிநேரம் தூங்க வேண்டும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த சுவாசப் பயிற்சிகள், யோகா செய்யலாம். தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
பாஸ்ட் புட் தவிர்த்து சத்துகள் நிறைந்த காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.