உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் அறிமுகமானவர் ரோபோ சங்கர். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், விஷாலுடன் இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ரோபோ ஷங்கருக்கு சில நாட்களுக்கு முன் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உடல் நலம் குணமாகி நடிப்பில் பிஸியான ரோபோ சங்கருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீர்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வந்த நிலையில் இன்று அவர் ஐ.சி.யு.க்கு மாற்றப்பட்டார். உயிர் காக்கும் கருவிகளை பொறுத்தி மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
இந்தசூழலில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இரவு ரோபோ சங்கர் காலமானார்.