மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என்று நடிகர் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இந்த படத்தில் நடிகர் பார்த்திபனும் நடித்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. இதனால் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ், பார்த்திபன் உள்ளிட்டோர் பிஸியாக உள்ளனர்.
இந்தநிலையில், ‘சற்றுமுன் பரபரப்பு… நடிகர் பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார்’ என்று லூஸ்டாக் தமிழ் என்ற யூடியூப் சேனலில் சார்ட்ஸ் வெளியிடப்பட்டது. மூன்று வாரத்துக்கு முன்பே இந்த வீடியோ போடப்பட்டுள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த வீடியோவை இன்று (செப்டம்பர் 13) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘இதுபோன்ற செய்திகள் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் …. மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம்… அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும். இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத் திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும்’ என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அந்த யூடியூப் சேனலில், கேபிஒய் பாலா தலைமறைவு, ஏ.ஆர்.ரகுமான் வாழ்க்கை முடிந்தது, அமெரிக்காவில் நடிகர் கமல்ஹாசன் மரணம் என ஏராளமான பொய்ச் செய்திகள் பகிரப்பட்டுள்ளன. இப்படிபட்ட வதந்திகளை பரப்பும் இந்த யூடியூப் சேனலை தடை செய்வதுடன், இந்த சேனலை நடத்தி வருபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.