மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்கு வந்த ரசிகர்கள் அஜித் கட் அவுட்டிற்கு தவெக கட்சி துண்டை போட்டு கவனம் ஈர்த்துள்ளனர்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2 ஆவது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் தற்போது தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டிற்கு இன்று அதிகாலை முதலே தொண்டர்கள் குவிய தொடங்கினர். மாநாடு நடைபெறும் பகுதியில் 102 டிகிரி அளவில் வெயில் இருப்பதால் தொண்டர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் தொண்டர்கள் சிலர் அஜித்தும், விஜய்யும் இணைந்து வருவது போன்ற கட் அவுட்களை எடுத்து வந்தனர். அதில் அஜித்துக்கு தவெகவின் கொடியை அணிவித்துள்ளனர்.
முன்னதாக அஜித் தனது அறிக்கை ஒன்றில், “நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன். என்னுடைய தொழில் நடிப்பு என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்துள்ளேன். எனது ரசிகர் மன்றங்களைக் கலைத்தது கூட இந்தப் பின்னணியில்தான். அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. ஆனால் அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும். என் பெயரோ அல்லது என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்வில் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.