சோசியல் மீடியாவில் வைரலான ‘ஆக்‌ஷன் வீடியோ’.. ஸ்டாலின் தந்த விளக்கம்!

Published On:

| By Mathi

Stalin Video

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தான நேற்று சமூக வலைதளங்களில் வைரலான தமது ஆக்‌ஷன் வீடியோ குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக- காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் காரில் ஏறும் போது முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களிடம் காட்டிய ரியாக்‌ஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே தஞ்சாவூர கரந்தை தமிழ்ச் சங்கத்தில் இன்று (மார்ச் 5) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இத்திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு எந்தச் சூழ்நிலையில் வந்திருக்கிறேன் என்பதும் உங்களுக்கும் தெரியும். நேற்று இரவு வரை கூட்டணிக் கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டுத்தான், அதுவும் வெற்றிகரமாக முடித்துவிட்டுத்தான், எல்லோரும் பாராட்டக்கூடிய வகையிலே முடித்துவிட்டுத்தான்…

இன்றைக்கு நீங்களெல்லாம் வாட்ஸ்அப்-ல, சோசியல் மீடியாவுல பார்த்திருக்கலாம். அந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறுகிறபோது கையை எடுத்து இப்படி ஒரு சொல்… அந்த ஆக்‌ஷனோடு நான் ஏறிய காட்சியைப் பார்த்திருப்பீர்கள்.

ADVERTISEMENT

அதை நான் திட்டமிட்டுச் செய்தது இல்லை. காரில் ஏற வருகிறபோது அங்கே எதிரில் நின்று கொண்டிருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எல்லாம் பார்த்து, ‘என்ன முடிந்துவிட்டதா, முடிந்துவிட்டதா?’ என்று கேட்டார்கள். ‘முடிந்துவிட்டது’ என்று சொன்னேன், அவ்வளவுதான். அது இன்றைக்கு ஒரே வைரலாகி, ‘எல்லாம் முடிந்தது, ஆல் பினிஷ்ட்’ என்று சொல்வது மாதிரி இன்றைக்கு அந்த காட்சிகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்” என விளக்கம் அளித்தார்.

மேலும், ”இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்யசபாவிற்கு வேட்பாளராக நாங்கள் இரண்டு பேரை அறிவித்திருக்கிறோம், கூட்டணிக் கட்சிக்கு இரண்டு பேருக்கு கொடுத்திருக்கிறோம். அந்த நான்கு பேரும் சரியாக 12 மணி அளவில் சென்னையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இன்றுதான் கடைசி நாள். நான் வந்தே தீர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் வழக்கமாகச் செல்வது உண்டு. ஆகவே இதை முடித்துவிட்டு உடனடியாக நான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்க காரணத்தால்தான், வேக வேகமாக வந்து, வேக வேகமாக இந்தத் திருமணத்தை முடித்து வைத்துவிட்டு நான் செல்லவிருக்கிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

அன்பிலார்- கலைஞர் குடும்பம்.. வாழையடி வாழையாக உறவு

இத்திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய, நம்முடைய அன்பிற்குரிய அன்பில் அவருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்தத் திருமணம்; அன்பில் பொய்யாமொழி – மாலதி ஆகியோரின் பேத்தியும், சுரேஷ் – எழிலரசி என்கிற சுகி ஆகியோரின் மகளுமான ஓவியா அவர்களுக்கும்;

வரதய்யா – சுலோசனா ஆகியோரின் பேரனும், ஹேமச்சந்தர் – மோகனா ஆகியோரின் மகனுமான மணமகன் மனோஜ் அவர்களுக்கும் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று, மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, அதேநேரத்தில் மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களுக்கு மணவிழாவை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

வரவேற்புரையாற்றிய தம்பி உதயநிதி குறிப்பிட்டதைப் போல, இது எங்கள் குடும்பம் என்று சொல்வதா, கழகக் குடும்பம் என்று சொல்வதா, ஒட்டுமொத்தமாகச் சொன்னால் நமது குடும்பம் என்ற நிலையில்தான் இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும், நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய அன்பில் அவர்களுடைய கழகப் பணி இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தலைவர் கலைஞரிடத்தில் எந்த அளவிற்கு நட்புக் கொண்டிருந்தார், தலைவர் கலைஞருக்கு எந்த அளவிற்குத் துணையாக இருந்தார்… இந்தத் திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கழகத்தை உருவாக்குவதற்கு, கழகம் இன்றைக்கு கம்பீரமாக ஓங்கி நிற்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்த அன்பில் அவர்கள், கடைசி வரையிலே கழகத்திற்கு, தலைவர் கலைஞருக்குப் பக்கபலமாக இருந்தவர்.

அவரைத் தொடர்ந்து அவருடைய திருமகன், என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி அவர்கள். அவர் எனக்கு எந்த அளவிற்குப் பக்கபலமாக இருந்தார் என்பதும் உங்களுக்கும் தெரியும். ஆகவே ஒரு உற்ற நண்பனாக மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலே ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அன்பில் பொய்யாமொழி அவர்கள்.

ஆகவே இப்படித் தொடர்ந்தது அந்த உறவு. அதற்குப் பின்னால், இங்கே வரவேற்புரையாற்றிய தம்பி உதயநிதி குறிப்பிட்டதைப் போல, இன்றைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்றைக்கு எங்களுடைய குடும்பத்திலே, குறிப்பாக உதயநிதியிடத்தில் எந்த அளவுக்கு நட்போடு பழகி, அவர் இன்றைக்கு வளர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, அமைச்சராகவும் பொறுப்பேற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, ஒரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்.

சட்டமன்றத்தில் உரையாற்றினாலும் சரி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றினாலும் சரி, எந்தப் புள்ளி விவரமும் கையிலே வைத்துக் கொள்ளாமல் எதையும் படபடவென்று கம்ப்யூட்டரைப் போலப் பேசக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள். அவரைப் பார்த்து எல்லோரும் பாராட்டுகிறபோது, அவருடைய தந்தை என்னுடைய அருமை நண்பர் பொய்யாமொழி எந்த அளவுக்குச் சந்தோஷப்படுவாரோ, அதைவிட அதிகமாக நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன், இப்பொழுதும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஆகவே இது இப்படித் தொடர்ந்து… இன்னும் அன்பில்லோடு முடியவில்லை, தலைவர் கலைஞரோடு முடியவில்லை, என்னோடு முடியவில்லை, நம்முடைய அன்பில் பொய்யாமொழியோடு முடியவில்லை. அதேபோல நம்முடைய உதயநிதி – மகேஷோடு முடியும் போதெல்லாம், உதயநிதியினுடைய மகன் இன்பனாக இருந்தாலும் சரி, மகேஷுடைய மகன் இனியனாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நட்பும் இன்றைக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே வாழைையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

தம்பி உதயநிதி பேசுகிறபோது சொன்னார், இது காதல் திருமணம் என்று. நானும் கேள்விப்பட்டேன். அதுமட்டுமல்ல, இந்தத் திருமணத்தை நடத்துவதற்குப் பெண்ணினுடைய தாயார் சுகி என்கிற எழிலரசி ஒத்துக்கொள்ளவே இல்லையாம் கடைசி வரைக்கும்; அதுவும் நான் கேள்விப்பட்டேன். கடைசி வரைக்கும் ஒத்துக்கல. ரொம்பப் பிடிவாதக்கார். பிடிவாதக்காரராக இருக்கக்கூடிய சுகி அவர்கள் எனக்கு நன்றாகத் தெரியும். அவங்க வீட்ல ரொம்பப் பிடிவாதம் யாருன்னு கேட்டீங்கன்னா சுகியைத்தான் சொல்ல முடியும்.

ஏற்கனவே அவளுடைய தம்பி, சின்ன உதயா என்று சொல்லக்கூடிய உதயன், அவருக்கும் காதல் திருமணம்தான். அதுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் இதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்று சொன்னாலும், நாங்களெல்லாம் சொன்னால் கேட்டுக்கொள்வார்கள். செந்தாமரை எப்படி எனக்கு ஒரு பெண்ணாக இருக்கிறாரோ, அதேபோல சுகி என்கிற எழிலரசி எனக்கு ஒரு பெண்ணாக இருந்து கொண்டிருப்பவர்.

அதுமட்டுமல்ல, என்னுடைய மகள் செந்தாமரையும் சுகியும் இன்றைக்கு ரொம்ப நட்போடு பல்வேறு தொழில்களில் கூட பார்ட்னராக இருந்து பணியாற்றி வருகிறார்கள். ஆகவே அந்த அளவுக்கு நட்போடு இருந்த குடும்பம், இன்றைக்கு அந்த இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே பொய்யாமொழி இருந்து இந்த விழாவை நடத்துகிறபோது எந்த அளவுக்கு மகிழ்ச்சியடைவாரோ, அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share