இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இளஞ் சிவப்பு ஆட்டோக்களை (Pink Auto) வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆட்டோக்களில் பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடன் உதவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து ஆட்டோக்களை வழங்கினார்.
இந்நிலையில் சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் இயக்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளஞ்சிவப்பு ஆட்டோக்களை சென்னையில் பல இடங்களில் ஆண்கள் இயக்கி வருவதாக புகார்கள் வந்தது தொடர்பாக சமூக நலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் சில ஆண்கள் இளஞ்சிவப்பு ஆட்டேக்களை ஓட்டுவது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த விதிகள் பற்றி இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கும் பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும் ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூகநலத்துறையால் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமூக நலத்துறை ரீதியாக எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கி வருவது புகார் பெறப்பட்டுள்ளது. மேலும், இது போல் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
