பிரதமர் நரேந்திர மோடி இன்று 4 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். இதில் எர்ணாகுளம் – பெங்களூரு வந்தே பாரத் ரயில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்தியாவின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தம் நோக்கில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரயில் சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
பனாரஸ் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். அப்போது 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இது இந்தியாவின் விரிவடைந்து வரும் அதிவேக ரயில்களின் வலையமைப்பில் மற்றொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ரயில்களின் விபரம்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் கேரளா, தமிழகம், கர்நாடகா என 3 மாநிலங்களை இணைக்கிறது. இந்த ரயில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் பயணித்த குழந்தைகளுக்கு மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
உ.பி.யின் பனாரஸ் நகரில் இருந்து ம.பி.யின் கஜூராகோ இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலானது வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூடம் வழியே பயணிக்கிறது. கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்கும்.
உ.பி.யின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையிலான வந்தே பாரத் ரெயிலால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இந்த ரெயிலானது லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பைரேலி, மொராதாபாத், பிஜ்னூர் நகரங்களில் நின்று செல்லும்.
பஞ்சாபின் பிரோஸ்பூர்-டெல்லி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் இரு நகரங்கள் இடையிலான பயண நேரம் 6 மணி 40 நிமிடமாக குறையும். டில்லியில் இருந்து பஞ்சாபின் பதின்டா, பாட்டியாலா நகரங்களுக்கான இணைப்பு பலம் பெறும்.
